கோவையில் இளம் தலைமுறையினரிடம் பாரம்பரியக் கலைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து 4.30 மணி நேரம் நடனம் ஆடி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து கலைக்குழுவினர் சாதனை படைத்தனர்.
கோவையில் பாரம்பரிய கலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற ஒயிலாட்டம் அரங்கேற்ற விழாவில் சிறுமியர்கள் முதல் பெரியவர்கள் வரை வண்ண உடைகளுடன் ஒருசேர நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இளம் தலைமுறையினருக்கு பழமையான கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பழமையான கலைகளை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் கோவை சிகரம் கலை குழுவின் முப்பெரும் ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா சுப்ரமணியம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
இதில், நாட்டுப்புற பாட்டுக்கு ஏற்ப சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் வண்ண உடைகளுடன் காலில் சலங்கை கட்டி ஒருசேர ஒயிலாட்டம் ஆடி அசத்தினர். கலைக்குழுவின் ஆசிரியர் அருண் ஆறுச்சாமி தலைமையில் தொடர்ந்து நான்கரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஒயிலாட்டம் நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.