பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கோவை தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் முன்னிட்டு, இந்தியா கூட்டணியின் சார்பில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள துடியலூர் சந்தை சந்திப்பு பகுதியில் கூடி நின்ற மக்களைச் சந்தித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த தொகுதியில் நாம் தெளிவாக வாக்களிக்க வேண்டும், இல்லையென்றால் அது இந்தியாவிற்கே பெரிய ஆபத்தாக அமையும். தனது சொந்த தொகுதியில் போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவோம் என்று வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் மூலம் வெற்றி பெற்று விடலாம் என்று கோவையில் நிற்கிறார் அண்ணாமலை. எங்கு நின்றாலும் 3வது இடம் தான். மக்களுக்கு இடையே பொய் செய்திகளைப் பரப்புவதற்காகத் தனிக் குழுவினை வைத்து செயல்பட்டு வருகிறார்கள். மக்களிடம் பொய் செய்தி மூலம் பிரிவினை ஏற்படுத்திட வேண்டும் என்று செயல்படுகின்றனர்.
20 ஆயிரம் புத்தகங்களை இதுவரை படித்துள்ளாராம். 5 வயதில் இருந்து நாள் ஒன்று 2 புத்தகம் படித்தாலும் கூட 20 ஆயிரம் புத்தகம் படித்து இருக்க முடியாது. அண்ணாமலைக்கு எது எடுத்தாலும் பொய் தான். பாஜகவினர் பெரிய சலவை இயந்திரம் வைத்துள்ளனர். ஊழல் செய்த நபர் பாஜகவில் சேர்ந்தாலும் உடனே சலவை செய்து அவரை வெள்ளையாக மாற்றி விடுவார்கள். ஆனால் அவர்கள் செய்யும் ஊழல் நாம் எடுத்துரைத்தால் உடனே அவர்கள் கைது, அல்லது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை செய்வர்.
அதிமுக - பாஜக கூட்டணி இல்லை, என்று கூறும் எடப்பாடி, எங்காவது மோடி அரசு பற்றிப் பேசுகிறாரா? தற்போது நடைபெறுவது சட்டமன்ற தேர்தல் என்று நினைத்து மாநில அரசை எடப்பாடி பழனிசாமி குறை கூறி வருகிறார். சேலத்தில் 2 விவசாயிகள் நிலத்தை பாஜகவினர் அபகரிக்க நினைத்தனர். அவர்கள் நிலத்தைத் தரவில்லை என்றதும் அவர்கள் மீது அமலாக்கத் துறையை ஏவி சோதனை செய்தனர்.
திமுகவை கோயிலுக்கும், இந்து மதத்திற்கும், பெரும்பான்மை மக்களுக்கு எதிரானவர்கள் என்று சொல்லுகிறது பாஜக. பாஜக தான் அனைவருக்கும் எதிரான கட்சி. திமுகவின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களில் பெரும்பான்மை மக்கள் தான் பயன்பெற்று வருகின்றனர். 1,331 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திய ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி.
யாருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது, இல்லை என்பது முக்கியம் இல்லை. அவர்களுக்கு யார் நம்பிக்கையாக இருக்கிறார் என்பது தான் முக்கியம். 770 கோடி ஒதுக்கீடு செய்து, இந்த பகுதியின் தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்து வரும் திமுக ஆட்சி. நாம் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் நமது வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.