தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் எனவும், அவருக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்பு மற்றும் புதிய தொழில்நுட்ப கருவிகளின் செயல்பாடு ஆகியவற்றை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். கோவை அரசு மருத்துவமனையில் ரூ.13.75 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மருத்துவ கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் 12 கோடி ரூபாய் செலவில் PET - CT SCAN ஐ மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மழைகாலத்தில் பரவக்கூடியது தான் புளு வைரஸ் எனவும், இந்த காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் இறுதி வரை காய்ச்சல் முகாம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றது. மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். செந்தில் பாலாஜி எவ்வளவு நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பதை அவரை கண்காணிக்கும் மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். அவருக்கு மனஅழுத்தம் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகள் இருக்கிறது. இரண்டு கால்களுக்கு மரத்து போவதால் தொடர்ந்து பிசியோதெரபி செய்ய வேண்டி இருக்கிறது. அதேபோல் அவருக்கு நடந்தால் மயக்கம் வருகிறது எனவும், அவருக்கு இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் மருத்துவ பரிசோதனை முடியும் எனவும் தெரிவித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் நலமுடன் இருக்கிறார். சம்பந்தபட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினேன். அவருக்கு ஏற்கனவே உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் சற்று மூச்சு திணறலும், தொடர் இருமலும் இருப்பதால் தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவைபடும் போது அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்படுகிறது. அவர் நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.