கோவை காளம்பாளையம் பகுதியில் மது வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் திமுக இளைஞரணியை சேர்ந்தவர்கள் கூலித் தொழிலாளியை கொலை செய்துவிட்டு தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாதம்பட்டி அடுத்த கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 55). அதே பகுதியில் திமுக இளைஞரணியைச் சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகிய இருவரும் காளம்பாளையம் பகுதியில் மதுபான கடை வைத்து நடத்தி வருகின்றனர். காளம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கும் இருவரும் கரடிமடை ஊருக்குள்ளும் சட்டவிரோதமாக மது விற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காளம்பாளையம் மதுபான கூடத்தில் செல்வராஜ் மது வாங்கும்போது ராகுல் மற்றும் கோகுலுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து செல்வராஜ் கரடிமடை பகுதிக்கு சென்றுவிட அவரை பின்தொடர்ந்து வந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகிய இருவரும் செல்வராஜை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.
மது போதையில் பனை மரத்தின் உச்சியில் ஏறி மாட்டிக்கொண்ட ஆசாமி; போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்
அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் வைத்து செல்வராஜை இருவரும் சரமாரியாக தாக்கியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து இருவரும் தப்பி தலைமறைவான நிலையில் இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் சடலமாக கிடந்த செல்வராஜின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
Crime News: மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை
இதுகுறித்து அந்த ஊர் பொதுமக்கள் பேரூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராகுல் மற்றும் கோகுல் ஆகிய இருவரும் பொதுமக்கள் இருக்கும்போதே செல்வராஜை தாக்கி இழுத்துச் சென்றதை பொதுமக்கள் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பேரூர் காவல்துறையினர் அப்பாவி கூலித் தொழிலாளியை கொலை செய்து தோட்டத்தில் வீசிவிட்டு தலைமறைவாகிய திமுக இளைஞரணி பொறுப்பாளர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.