நேரலை ஒளிப்பரப்பில் உலக சாதனை படைத்த ஈஷா மஹாசிவராத்திரி விழா

By Kanimozhi PannerselvamFirst Published Mar 30, 2021, 3:29 PM IST
Highlights

சமூக வலைத்தளங்களில் மட்டும் 2 கோடி பேர் பார்த்துள்ளதாக போல் ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை ஃபேஸ்புக், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் இந்தாண்டு சுமார் 2 கோடி பேர் நேரலையில் பார்த்துள்ளனர். இதன் மூலம் அன்றைய வாரம் உலக அளவில் அதிகம் பேர் பார்த்த நிகழ்ச்சிகளின் பட்டியலில் இவ்விழா முதலிடத்தை பிடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிராமி விருது வழங்கும் விழாவை கூட இது பின்னுக்கு தள்ளியுள்ளது. 2-ம் இடம் பிடித்த கிராமி விழாவை 1.3 கோடி பேர் மட்டுமே நேரலையில் பார்த்துள்ளனர். இத்தகவலை பிரபல போல்ஸ்டார் (Pollstar) நிறுவனம் வெளியிடுள்ளது.

கோவையில் உள்ள ஈஷாவில் மஹாசிவராத்திரி  விழா ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக, மிக குறைவான மக்களுடன் விழா பாதுகாப்பாக கொண்டாடப்பட்டது. சத்குருவுடன் நள்ளிரவு தியானம், பல்வேறு மாநில கலைஞர்களின் நாட்டு புற இசை நிகழ்ச்சிகள் உட்பட பல அம்சங்களுடன் விழா கோலாகலமாக நடந்தது. இவ்விழா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் மற்றும் ரஷ்யன், சைனீஸ், போர்ச்சுகீஸ் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் என மொத்தம் 13 மொழிகளில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

மார்ச் 11-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை 12 மணி நேரம் நடந்த இவ்விழாவில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் நேரலையில் பங்கேற்றனர். அதில் சமூக வலைத்தளங்களில் மட்டும் 2 கோடி பேர் பார்த்துள்ளதாக போல் ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதவிர, இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தொலைகாட்சிகள் மூலம் பல கோடி பேர் இவ்விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், பாரத கலாச்சாரத்தின் மிக முக்கிய விழாவாகவும், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகவும் திகழும் மஹாசிவராத்திரி விழாவை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை ஈஷாவுக்கு கிடைத்துள்ளது.

tags
click me!