காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
தமிழகம் முழுவதும் 16ஆம் தேதி பொங்கல் பண்டிகையும் 17ஆம் தேதி மாட்டுப் பொங்கலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது. காணும் பொங்கல் தினத்தில் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது பாரம்பரிய வழக்கம்.
இந்த நாளில் நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுலாத்தலங்கள், பொழுதுபோக்கு இடங்களுக்குச் சென்று பொதுமக்கள் நேரத்தை செலவிடுவர். அந்த வகையில் காணும் பொங்கல் தினமான இன்று கோவையின் பல்வேறு பொழுதுபோக்கு இடங்களிலும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
அந்த வகையில் கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். மேலும், அருவியில் குழந்தைகள் நண்பர்களோடு குளித்து மகிழ்ந்தனர். கோவை மக்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இன்று கோவை குற்றாலம் வந்து மகிழ்ந்தனர்.