கோவையில் நோய்வாய்ப்பட்டு உணவருந்த முடியாமல் உயிரிழந்த காட்டு யானை தவறுதலாக வெடி மருந்தை சாப்பிட்ட போது அது வாயில் வெடித்தது தான் யானையின் இறப்புக்கு காரணம் என்று மருத்துவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட காரமடை வனச்சரகப் பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் வாய் பகுதியில் காயங்களுடன் பெண் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்தது. இந்த யானை கடந்த 17ம் தேதி கால்நடை மருத்துவக் குழுவினரால் மயக்க ஊசி செலுத்தி சின்னத்தம்பி என்ற கும்கி யானையின் உதவியுடன் பிடிக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகம் வரகளியார் யானைகள் முகாமில் உள்ள கிராலில் பெண் காட்டு யானை சிகிச்சைக்காக விடப்பட்டது. கிராலில் பெண் காட்டு யானைக்கு முதல் கட்ட சிகிச்சைகள் வழங்கபட்டன.
உதவி இயக்குநர் மனோகரன் உதவி வனக்கால்நடை மருத்துவ அலுவலர் விஜயராகவன் அவர்களால் யானைக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுமார் 8 மணியளவில் கிராலில் சிகிச்சையில் இருந்த பெண் காட்டு யானை உயிரிழந்தது. வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ராமசுப்பிரமணியன் மற்றும் வனச்சரக அலுவலர், நேச்சுரல் இன்ஸ்டியூட் ஆப் டிரஸ்ட் அமைப்பின் முன்னிலையில் இன்று இறந்த யானைக்கு உடல் கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கோவையில் தாலிச் செயினை பறித்துச் சென்ற ராணுவ வீரரை மடக்கி பிடித்த பொதுமக்கள்
உடற்கூறு ஆய்வில் பெண் காட்டு யானை வெடி மருந்தினை உண்டதால் வெடி மருந்து வெடித்து யானையின் தாடை மற்றும் பற்கள் சேதமடைந்து விட்டதாகவும், இதன் காரணமாக யானையினால் உணவு உட்கொள்ள முடியாமல் உடல் பலவீனமடைந்து இறந்து விட்டதாக மருத்துவக் குழுவினர் அறிக்கை அளித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.