
கோவை காந்திபுரத்தில் உள்ள சிறைச்சாலை மைதானத்தில் 6.98 ஏக்கர் பரப்பளவில் ரூ.245 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியார் நினைவாக பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மைய கட்டடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுவாக புதிதாக கட்டப்படும் கட்டங்களில் கண் திருஷ்டி பொம்மைகள் வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கட்டுமான பணி நடைபெறும் பெரியார் நூலக கட்டடத்தில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டு இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெரியார் நூலக கட்டடத்தில் திருஷ்டி பொம்மை
ஏனெனில் சமூக சீர்த்திருத்தவாதியான தந்தை பெரியார் மூட நம்பிக்கைகள் முற்றிலுமாக ஒழிய வேண்டும் என்று பாடுபட்டார். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தான் இருக்கும் வரையிலும் அழுத்தமாக குரல் கொடுத்தார். இப்படிப்பட்ட தந்தை பெரியார் நூலக கட்டடத்தில் திருஷ்டி பொம்மை படம் வைக்கப்பட்டது திராவிட கழத்தினர் மட்டுமின்றி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.
திராவிட கழகத்தினர் கடும் எதிர்ப்பு
மூடநம்பிக்கை எதிராக குரல் கொடுத்த தந்தை பெரியார் பெயரில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தில் நுழைவாயில் கண் திருஷ்டி படம் வைத்திருப்பதற்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார். அந்த கட்டடத்தில் இருந்து கண் திருஷ்டி பொம்மையை அகற்றாவிட்டால் தமிழக அரசே கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள திராவிட கழகத்தினரும் பெரியார் நூலக கட்டடத்தில் திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர்
இதற்கிடையே பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப்பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கோவையில் பட்டதாரிகள், மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பெரியார் நூலகத்தின் கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ரூ.245 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த பணிகள் டிசம்பர் மாதத்தில் முடிக்கப்பட்டு ஜனவரி மாதம் பொங்கலுக்குள் திறக்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது 5 தளங்கள் கட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து 6 மற்றும் 7வது தளம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமான பணி தரமாக நடைபெறுகிறதா? என்பதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். நான் இதுவரை 5 முறை ஆய்வு செய்து உள்ளேன். இதில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் ஏறுதளம் மற்றும் லிப்ட் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது'' என்றார்.
விளக்கம் அளித்த அமைச்சர்
தொடர்ந்து செய்தியாளர்கள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் பெரியார் நூலக கட்டடத்தில் திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அவர், ''இது தொடர்பாக எனக்கு இதுவரை தகவல் வரவில்லை. நானும் பெரியார் கொள்கையை உடையவன், பகுத்தறிவாளன். எல்லாரும் என்னைப்போல் இருக்க மாட்டார்கள். இது கட்டுமான ஒப்பந்ததாரர்களின் நம்பிக்கையாக இருக்கலாம். அரசு மற்றும் என்னை பொறுத்தவரை இதுபோன்று பொம்மை வைக்க வேண்டும் என்று எந்தவிதமான ஒப்பந்தமும் போடவில்லை’’ என்று விளக்கம் அளித்தார்.