கோவை மாநகராட்சியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்ட நிலையில், இதில் பங்கேற்ற கவுன்சிலர்கள், அரசு ஊழியர்கள் இசைக்கப்பட்ட பாடல்களுக்கு மெய் மறந்து உற்சாகத்தில் நடனமாடி பொங்கலை கொண்டாடினர்.
கோவை மாநகராட்சியில் இன்று பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மேயர் கல்பனா தலைமையில், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பெண் கவுன்சிலர்கள் பொங்கல் வைத்து பண்டிகையினை கொண்டாடினர். மாநகராட்சி மண்டல வாரியாக தனித்தனியாக கவுன்சிலர்கள் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி வரும் பொழுது பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு பொங்கல் பண்டிகையினை உற்சாகமாக வரவேற்றனர்.
பொள்ளாச்சி சர்வதேச பலூன் திருவிழா; கண்கவர் பலூன்களை பார்த்து ரசித்த பொதுமக்கள்
undefined
மேலும் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும், ஊழியர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. கோலப்போட்டி, பம்பரம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவின் உச்சமாக இசைக்கப்பட்ட பாடல்களுக்கு ஏற்றபடி மாநகராட்சி ஊழியர்களும், மாநகராட்சி பெண் கவுன்சிலர்களும் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
மாநகராட்சி ஆணையர் பிரதாப் வேஷ்டி, சட்டையுடன் விழாவில் பங்கேற்றார். மாவட்ட ஆட்சியர் சமீரனும் மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவற்றை மாநகராட்சி மேயர் கல்பனா, ஆட்சியர் சமீரன், ஆணையாளர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் ஒன்றாக அவற்றை கண்டு ரசித்ததுடன் மாணவர்களை உற்சாகப்படுத்தினா்.
இதே போன்று கோவை கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தாரரேஷ் அகமது, மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் ஆகியோர் கலந்து கொண்டு ஊர்மக்களுடன் கும்மியடித்து நடனமாடி மகிழ்ந்தனர்.