கோவை மாநகராட்சி பள்ளி வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தியதாக செய்தி வெளியான நிலையில் இளைய சமுதாயம் தடம் மாறி தவறான பாதையில் பயணிப்பதை தடுக்க வேண்டும் என தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாநகராட்சி பள்ளி ஒன்றில் பதினொன்றாம் பயிலும் மூன்று மாணவர்கள் உடற்கல்வி வகுப்பு நேரத்தில், வகுப்பறைக்குள் அமர்ந்து குளிர்பானத்தில் மதுவை கலந்து அருந்தியதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
புத்தகங்களும், பேனாக்களும் இருக்க வேண்டிய கைகளில் அண்மைக் காலமாக மதுபாட்டில்களும், போதைப் பொருட்களும் தாராளமாக புழங்குவதாக வரும் செய்திகளை பார்க்கும் போது இளைய தலைமுறையான பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வை அதிகரிக்கச் செய்கிறது.
ஆசை ஆசையாக வாங்கிய நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு; விலை தெரியுமா?
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை கட்டுப்படுத்தவோ, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வோ ஏற்படுத்தாதன் விளைவாக பள்ளி வகுப்பறைக்குள்ளே அமர்ந்து மாணவர்கள் மது அருந்தும் அளவிற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், சமுதாயத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அரசு நிர்வாகம், அதனை செய்யத் தவறியதால் சிறு வயதிலேயே மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி ஆசிரியர்களை கேலி செய்வதும், தாக்குதல் போன்ற அநாகரீகமான செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகின்றன.
படிகட்டுக்கு 11 லட்சமா? அனிதா சம்பத்தின் வீடியோவுக்கு அடடே விளக்கம்
எனவே, மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்களை, அதிலிருந்து மீட்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி அரசுக்கும் இருக்கிறது என்பதை இனியாவது உணர்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே இயங்கி வரும் மதுபானக்கடைகளை உடனடியாக அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.