தமிழக நூற்பாலைகளில் தொடரும் நஷ்டக் கணக்கு! 50 சதவீதம் உற்பத்தி குறைப்பு!

By SG BalanFirst Published May 22, 2023, 8:44 PM IST
Highlights

தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள் தொடர் நஷ்டம் காரணமாக உற்பத்தியைப் பாதியாகக் குறைத்துள்ளதாக சிறு நூற்பாலைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜகதீஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள் தொடர் நஷ்டம் காரணமாக முடங்கும் அபாயத்தில் இருப்பதாகவும் சிறு நூற்பாலைகளில் திங்ட்கிழமை முதல் 50 சதவீதம் உற்பத்தி குறைக்கப்படுவதாகவும் சிறு நூற்பாலைகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோவை அவினாசி சாலையில் இந்திய வர்த்தக சபை அலுவலகத்தில் சிறு  நூற்பாலைகள் கூட்டமைப்பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜகதீஷ் சந்திரன், தமிழகத்தில் நூற்பாலைகள் இயக்குவதில் மிகவும் சிரமம் உள்ளதாகக் கூறினார். நூற்பாலை தொழிலில் இந்திய அளவில் தமிழ்நாடு 50 சதவீதம் பங்கு வகிக்கும் நிலையில், தமிழக நூற்பாலைகள் பிரச்சினை என்பது நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலியை பாதிக்கும் என்றும் கூறினார்.

வங்கிகளில்  வட்டி விகிதங்கள் 7.75% இருந்து 10.75% வரை உயர்ந்திருப்பது, சமீபத்திய மின் கட்டண உயர்வு ஆகியவற்றால் நூல் உற்பத்தி செலவு ஒரு கிலோவுக்கு 6 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் மத்திய அரசால் வழங்கப்பட்ட குறுகிய கால கடனுக்கான அசல் மற்றும் வட்டி செலுத்த கட்டாயப்படுத்துவதால் நூற்பாலைகள் நடத்துவது பெரும் சுமையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: வீடுகளுக்குத் தீ வைப்பு... மே 26 வரை இன்டர்நெட் சேவை முடக்கம்

மேலும், சீனா, வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து நூல் மற்றும் துணி வகைகள் கட்டுப்பாடின்றி இறக்குமதி செய்யப்பட்டாலும், உள்நாட்டு உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளால் சர்வதேச உற்பத்தியாளர்களுடன் போட்டி போட முடிவதில்லை. உலகளாவிய மந்த நிலை, உக்ரைன் - ரஷ்யா போர் ஆகியவை இதற்கு முக்கியக் காரணமாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் 50% உற்பத்தியை குறைக்க சிறு நூற்பாலைகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது என்ற அவர், இந்த உற்பத்தி குறைப்பினால் நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படும் எனவும், ஜிஎஸ்டி வருவாயில் ரூ.10 கோடி, மின் கட்டண வருவாயில் ரூ.20 கோடி இழப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் 1500 நூற்பாலைகளும், 650 ஓ.இ.மில்களும் இயங்கிவரும் நிலையில், நேரடியாக 5 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 10 லட்சம் தொழிலாளர்களும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு ரூ.145 கோடி மதிப்பில் நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. எங்கள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கண்டுக்கொள்ளவில்லை என்றால் விரைவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். நூற்பாலைகள் முடங்கினால்  தமிழகத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும் ஜகதீஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.

கண்ணூரில் தன் பள்ளி ஆசிரியரிடம் ஆசி பெற்ற துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்

click me!