தமிழக ஆளுநர் ரவி மீது கோவை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேலும், நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
undefined
இந்த தேர்தலை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. அதன்படி, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் வழக்கு: ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கெடு!
இந்த நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக ஆளுநர் ரவி மீது கோவை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்கள் சேகரிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதுகுறித்து தமிழக ஆளுநர் ரவி மற்றும் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட பண்பாட்டுக் கூட்ட இயக்கத்தினர் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.