மோடி சுட்ட வடைகள் என கூறி பிரதமர் மோடிக்கு எதிராக திமுகவினர் பிரசாரம் மேற்கொண்டனர்
நாடாளுமன்றத் தேர்தல் களைக்கட்டியுள்ளது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை என ஒருபக்கம் பணிகள் நடந்து கொண்டிருக்க, அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், ஏற்கனவே கண்டா வர சொல்லுங்க, நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை என்ற வாசகங்கள் பொறித்த சுவரொட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாக கூறி, அவருக்கு எதிரான திமுகவினர் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். வாயைத் திறந்தாலே வடை வடையாய் சுட்டுத்தள்ளும் பிரதமர் மோடி எனக் கூறி 'வாயாலே வடை சுடும்' போராட்டத்தை கோவை, பொள்ளாச்சி திமுகவினர் முன்னெடுத்துள்ளனர்.
காவி நிற துண்டுடன் பாஜகவினர் போல, பிரதமர் மோடியின் முகமூடி அணிந்து கொண்டு பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு வடை வழங்கி, பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாகவும், அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என கூறியும் பிரசாரம் செய்தனர். வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன்; மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டி காட்டும் வகையில் பதாகைகளையும் அவர்கள் கையில் ஏந்தி முழக்கம் எழுப்பினர்.
அதேபோல், மோடி சுட்ட வடைகள் என சில திட்டங்களை நோட்டீஸில் பட்டியலிட்டு அதில் வடையை வைத்தும் திமுகவினர் பொதுமக்களுக்கு வழங்கி பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி அண்மையில் தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது, வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு சென்ற பிரதமர் மோடி, அம்மாவட்ட மக்களுக்கு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. அப்போதே திமுக சார்பாக வாயிலேயே பிரதமர் மோடி வடை சுடுவதாக பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு!
இந்த சூழலில், பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் வரவுள்ள நிலையில், மோடி சுட்ட வடைகள் என்ற பிரசாரத்தை திமுகவினர் முன்னெடுத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதற்கிடையே, பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழ்நாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இதனையும் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.