
கோவையில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அபகரிப்பு செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயமுத்தூர் மாவட்டம் காந்திபுரம் சக்தி சாலையில் எல்லன் மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் ராமச்சந்திரன் என்பவர் அந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் என்பவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுத்து இருந்தார். இதனை அடுத்து அந்த டாக்டர் உமாசங்கர் அந்த மருத்துவமனையை சென்னை மருத்துவமனை என பெயர் மாற்றம் செய்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் அவர்களிடையே வாடகை தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக டாக்டர் ராமச்சந்திரன் அடியாட்களுடன் வந்து மருத்துவமனைக்குள் நுழைந்து ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை அடித்து விரட்டி விட்டு மருத்துவமனையை கைப்பற்றினார். ஆனால், காவல் துறையினர் டாக்டர் உமாசங்கர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த டாக்டர் உமாசங்கர் நடைபயிற்சி மேற்கொண்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் மோதி உயிரிழந்தார். இந்த விபத்து வழக்கு தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அபகரிக்க முயன்ற வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட பொழுது டாக்டர் உமாசங்கர் மீது பொய் வழக்கு போடப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் இதன் பின்னணியில் காவல் துறையினர் சிலரும் உடந்தையாக இருந்து இருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து எல்லன் மருத்துவமனை தலைவர் டாக்டர் ராமச்சந்திரன், டாக்டர் காமராஜ் மற்றும் கூலிப் படையினர் என 13 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். அவர்களை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்த போது ,டாக்டர் ராமச்சந்திரனுக்கு உறுதுணையாக அடியாட்களை ஏற்பாடு செய்தது கொங்கு வேளாண் கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவரும், வழக்கறிஞருமான ராஜேந்திரன் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ராஜேந்திரனை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில் அவர் தலைமறைவானார். மேலும் வழக்கறிஞர் ராஜேந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட முன் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கறிஞர் ராஜேந்திரன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவரைப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் மூன்று தனி படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கோவை சி.பி.சி.ஐ.டி போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.