ஏனுங்.. இன்னிக்கு கோயம்புத்தூர் தினம்ங்க.. கோவை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ..

By Ramya sFirst Published Nov 24, 2023, 2:31 PM IST
Highlights

கோயம்புத்தூர் தினமான இன்று அதன் வரலாறு பற்றியும், சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்தும் பார்க்கலாம்.

தென்னிந்தியாவின் மான்ஸ்செஸ்டர் என்றும் தமிழ்நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரம் என்று அழைக்கப்படுகிறது கோயாம்புத்தூர் மாநகரம். தமிழ்நாட்டின் 2-வது பெரிய நகரமாக இருக்கும் கோவை லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. சிறுவாணி தண்ணீர், சில்லென்ற காற்று மரியாதையாக பேசும் கொங்கு தமிழ், என கோவையின் அடையாளங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். எனவே கோவை தினமான இன்று அதன் வரலாறு பற்றியும் சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்தும் பார்க்கலாம்.

கோவன் என்ற பழங்குடியின தலைவன் ஆண்டதால் இது கோவன் புத்தூர் என்று அழைக்கப்பட்டது. பின்னர் அது மருவி கோயம்புத்தூராக மாறி உள்ளது. கோயம்புத்தூர் குறிப்பிட்ட அரசர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததில்லை. சேரர், சோழர், பாண்டியர், ஹைதர் அலி, திப்பு சுல்தான், பிரிட்டிஷ் என பல ஆளுகைக்கு கீழ் இருந்துள்ளது. கோட்டை மேடு பகுதியில் இருந்த கோட்டைக்கு திப்பு சுல்தானும் ஆங்கிலேயரும் போர் புரிந்துள்ளனர்.

Latest Videos

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

1790ல் 5 மாத காலம் இப்பகுதியை முற்றுகையிட்ட திப்பு சுல்தான் ஆங்கிலேயரிடமிருந்து இதை கைப்பற்றிக் கொண்டார். 1799ல் நடந்த மைசூர் போரில் திப்புவை வென்று கோவையை கைப்பற்றிக் கொண்ட ஆங்கிலேயர்கள். 1804-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தை உருவாக்கினர். இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24-ம் தேதி கோயம்புத்தூர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவைக்கு இன்று 219-வது நாள்..

1868-ம் ஆண்டு நீலகிரி கோவையில் இருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. 1876 முதல் 1878 வரை பெரும் பஞ்சத்தையும் 1891-92ஆம் ஆண்டு கடும் வறட்சியையும் கோவை கண்டது. 19-ம் நூற்றாண்டில் துணி தயாரிப்பு வேகமான வளர்ச்சியை கண்டது. 1934-ம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் அணை கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தது. ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து மேம்படுத்தப்பட்டதால் சரக்கு போக்குவரத்து எளிதானது.

தென்னிந்தியாவில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் கோவையில் பல படப்பிடிப்பு தளங்களும் தொடங்கப்பட்டன. மேலும் 1920கள் பல துணி நூற்பாலைகள் தொடங்கப்பட்டன. பின்னர் நூற்பாலை, பஞ்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து தொழில் நகரமாக கோவை மாற காரணமாக அமைந்தது. இயந்திர பாகங்கள் மோட்டோர்கள், தொழில்களும் அதனை சார்ந்த தொழில்கள் உருவாக்கப்பட்டது. இப்போது கோவை நாட்டின் முன்னணி தொழில் நகரமாக மாறி உள்ளது.

கோவை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

மகாத்மா காந்தி கோவைக்கு 3 முறை சென்றுள்ளார்.  பிப்ரவரி 6, 1934ல் வந்தபோது கோவையின் மிக சிறந்த பொறியியல் மேதை GD நாயுடு அவர்கள் குடும்பத்திற்கு சொந்தமான போத்தனூர் பகுதியில் உள்ள வீட்டில் தங்கினார். அந்த வீடு இன்று காந்தியடிகள் நினைவாக அப்படியே உள்ளது.

கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முக்கியமானது. இந்த கோவில் கரிகால சோழனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தெரியுமா? கோவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கீழும் இருந்துள்ளது.

கோவை என்றாலே அதன் சிறப்புகளில் நம் நினைவுக்கு வருவது சிறுவாணி தண்ணீர். கோவை அருகே உள்ள சிறுவாணி நதி காவேரி நதியின் துணை நதி என்பது பலருக்கும் தெரியாத தகவல். 

இந்தியாவின் 3வது பெரும் பணக்காரர் ஷிவ நாடார் தனது கல்லூரி படிப்பை கோவையில் தான் படித்தார். அவர் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பயின்றார். இவர் மக்கள் நலனுக்காக ஆண்டுக்கு சுமார் ரூ 3000 கோடி தானம் செய்கிறார்.

தென்னிந்தியாவில் நிலநடுக்கம் என்பது அரிதான ஒன்றாக பார்க்கப்பட்ட நிலையில் கோவையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது பலருக்கும் தெரியாத தகவல். பிப்ரவரி 8, 1900ம் ஆண்டில் கோவையில் 6 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் அருகே ஏற்பட்டது. இது தென் இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன' அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அதை கோவையில் உள்ள ஒரு பள்ளியில் பள்ளியின் கீதமாக பாடப்பட்டு வந்துள்ளது. பி.எஸ்.ஜி. சர்வஜன பள்ளிக்கு செப்டம்பர், 1926ல் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வருகை தந்த போது அங்கு அதை வாசித்தார். அதன் பின்னர் அது அந்த பள்ளியின் கீதமாக பின்பற்றப்பட்டது.

தென்னிந்தியாவின் முதல் நிரந்தர சினிமா தியேட்டர் கோவையில் தான் கட்டப்பட்டது தான் என்பது பலருக்கும் தெரியாது.  சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவரால் 1914 துவங்கப்பட்ட வெரைட்டி ஹால் தியேட்டர்/ டிலைட் தியேட்டர் தான் அது. . உலகில் எத்தனை வீட்டு உபயோக பொருட்களை மேலை நாடுகள், ஐரோப்பிய நாடுகள் கண்டுபிடித்திருக்கலாம், ஆனால் முதல் மின்சார கிரைண்டரை உருவாக்கியது கோவை தான். தெரியுமா? கோவையை சேர்ந்த சபாபதி என்பவர் தான் 1950 களில் தனது 'எலக்ட்ரான் எலக்ட்ரிகல்' எனும் நிறுவனம் மூலம் உருவாக்கினர்.

இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற கோயம்புத்தூர் தொழிலிலும், கல்வியிலும் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆங்கிலேயர்கள் கோவை நகரை மக்கள் வாழ்வதற்கே தகுதியற்ற ஊர் என்று குறிப்பிட்ட காலம் மாறி இன்று லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளிக்கும் நகரமாக கோயம்புத்தூர் திகழ்கிறது. மக்களின் உழைப்பால் மட்டுமே சுயமாக நகரமாக உள்ளது. இன்று 219வது பிறந்தநாளை கொண்டாடும் கோயம்புத்தூர் மென்மேலும் வளர நாமும் வாழ்த்துவோம்..! 

click me!