அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் ராமாயண இதிகாசத்தை தான் பாட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோவை சிறுவன் கோரிக்கை விடுத்துள்ளார்
கோவையை சேர்ந்த ஏழு வயது சிறுவன், முழு ராமாயண இதிகாச கதையை குறைந்த நேரத்தில் கூறி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
கோவையை சேர்ந்த சிவகுமார், மலர்விழி தம்பதியரின் மகன் சௌரவ் சிவகுமார். ஏழு வயதான சிறுவன் சௌரவ், சிறு வயது முதலே ஆன்மீக கதைகளை ஆர்வமுடன் கேட்டு வந்துள்ளார். அவரது ஆர்வத்தை கவனித்த பெற்றோர், இராமயண இதிகாச புராணத்தை தமிழில் இவருக்கு சொல்லி கொடுத்துள்ளனர். இதை ஆழமாக கவனித்த சிறுவன் முழு கதையையும் மனதில் உள்வாங்கி, அதை அப்படியே சிறிதும் பிறழாமல் அதே சமயத்தில் வேகமாக பிறருக்கு புரியும் படி கூற துவங்கியுள்ளார்.
இவரது அரிய திறமையை கண்ட பெற்றோர் அளித்த தொடர் பயிற்சியில், ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி மற்றும் ஆதிசங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு சிறுவன் சௌரவ் முழு இராமாயண இதிகாச கதையை சமஸ்கிருத ஸ்லோகங்கள் மற்றும் கம்பராமாயணத்தின் பாலகாண்டம் முதல் யுத்த காண்டம் வரை ஒரு மணி நேரம் 37 நிமிடத்தில் சொற்பொழிவாக கூறி அசத்தியுள்ளார்.
ஏழு வயதே ஆன சிறுவனின் இந்த சாதனை இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சிறுவனின் சாதனையை பாராட்டி இந்தியா உலக சாதனை புத்தகம் இவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்துள்ளது. இதற்கு முன்னர் கலாம் புக் ரெக்கார்ட்ஸ் இவரது ராமாயண சாதனையை பாராட்டி அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாயமான ரூ.500 நோட்டுகள்: ஆர்பிஐ விளக்கம்!
சிறுவன் சௌரவிற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் ராமாயண இதிகாசத்தை தான் பாட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற திர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறும் எனவும், கும்பாபிஷேக விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.