கோவையில் கபர்ஸ்தானுக்கு 2 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு; இஸ்லாமியரின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்

By SG Balan  |  First Published Feb 21, 2024, 3:24 PM IST

கோவை முஸ்லிம்களின் முப்பது ஆண்டு கால கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளதாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின்  தலைவர் முகம்மது ரபி நன்றி தெரிவித்துள்ளார்.


கோவையில் கபர்ஸ்தான் பயன்பாட்டுக்காக இரண்டு ஏக்கர் நிலம் ஜமாத் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. இதன் மூலம்  கோவை மாவட்ட இஸ்லாமியர்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.

கோவையில் சாய்பாபாகாலனி, வடகோவை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு  வசிக்கும் இஸ்லாமியர்கள் தங்களது கப்ரஸ்தான் பயன்பாட்டுக்கென நிலம் வழங்க கோரி   சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம்  கோரிக்கை வைத்தனர். அவர் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம்  பேசியதின் அடிப்படையில், இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் தற்போது சங்கனூர் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலத்தை அந்த பகுதி ஜமாத்  நிர்வாகிகள் பயன்பாட்டுக்கு வழங்க கோரி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நிலம் ஒப்படைப்பதற்கான அரசு ஆணையை  மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் சந்தியா, கோவை மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர் ஹைதர் அலி, அனைத்து ஜமாத் பொதுச் செயலாளர் முகமது அலி,பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரபி ஆகியோரிடம்  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  பல்சமய நல்லுறவு இயக்கத்தின்  தலைவர் முகம்மது ரபி செய்தியாளர்களிடம் பேசுகையில், சுமார் முப்பது ஆண்டு கால கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளதாக கூறிய அவர், இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மற்றும் சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அதகாரிகள் ஆகியோருக்கு அனைத்து ஜமாத் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.

மேலும் தற்போது அறிவித்துள்ள பட்ஜெட் நலிவுற்றவர்களின் வாழ்க்கை ஏற்றம் பெறும் வகையில் இருப்பதாக கூறிய அவர், கோவையில்  டைடல் பூங்கா மற்றும் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் மகிழ்ச்சியை தருவதாகவும், இதனால் பல ஆயிரம் மக்கள் பயனடைவார்கள் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ,கோவை மாவட்ட முஸ்லிம் ஜமாத் மற்றும் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர், பல் சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாஹிர் வழக்கறிஞர் முகமது இஸ்மாயில், பாபுலால் ஏர்டெல் அபுதாஹிர், மனிதநேய மக்கள் கட்சி அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

click me!