மேட்டுப்பாளையம் அருகே கொண்டை ஊசி வளைவில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான பொலேரோ காரில் உறவினர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இரண்டு தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் வந்துள்ளனர். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இன்று சொந்த ஊரான நஞ்சநாடு செல்ல மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் காரில் சென்றுள்ளனர்.
அப்போது கார் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது திடீரென கட்டுபாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கணேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி மஞ்சுளா பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிய நபர் 100 அடி பள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.