பொள்ளாச்சி அருகே சாலையில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி கல் மீது மோதி கீழே கவிழ்ந்த ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சடைய கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்ட பூபதி (வயது 40). இவர் இன்று அதிகாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு மீண்டும் பொள்ளாச்சி திருப்பூர் சாலை கரப்பாடி பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்பொழுது சாலை பழுது பார்ப்பதற்காக நெடுஞ்சாலைத் துறையினர் ஜல்லிக் கற்களை சாலையில் கொட்டி வைத்துள்ளனர். எதிர்பாராத விதமாக ஜல்லிக்கற்கள் மீது ஏறிய ஆட்டோ நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மணிகண்டன் பூபதி சம்பவத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
புரோட்டா இல்லை என்று கூறிய கடைக்காரரை காற்றில் பறக்க விட்டு பந்தாடிய ரௌடிகள்
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறையினரின் அலட்ச்சியம் காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். திடீர் மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.