கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற வேண்டி தனது கைவிரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள் முள்ளி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம் (வயது 55). கடலூர் மாவட்ட பாஜக துணை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். கோவை மக்களவைத் தொகுதியில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவு திரட்ட 10 நாட்களுக்கு முன்பு கோவை வந்தார்.
துரை ராமலிங்கம் வீடு வீடாக சென்று பொது மக்களிடம் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார். நேற்று மாலை 6 மணியளவில் சிங்காநல்லூர் பகுதியில் அவர் பிரசாரத்தை முடித்துக் கொண்டார். அப்போது திடீரென தொண்டர்கள் முன்னிலையில் கையில் கத்தி ஒன்றை எடுத்துக் கொண்ட அவர், கோவை தொகுதியில் அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறியவரே தனது இடது கை ஆள்காட்டி விரலை திடீரென துண்டித்துக் கொண்டார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, அவரை மீட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து விரலை சேர்த்தனர். இது தொடர்பாக துரை ராமலிங்கம் கூறும் போது, தான் 10 ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதாவில் இருப்பதாகவும், பத்து நாட்களுக்கு முன்பு கோவை வந்து அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்ததாகவும் தெரிவித்தார். அருகில் இருந்தவர்கள் அவர் தோல்வியை சந்திப்பார் என கூறியதால் வேதனை அடைந்ததாகவும், இதனால் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விரலை வெட்டிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.