கோவை மாவட்டம் வடவெள்ளி காவல் நிலையத்தில் காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்து விசாரணைக் கைதி ஒருவர் வெள்ளி மோதிரத்தை விழுங்கிய நபரால் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம் வடவெள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த வாலிபரை அழைத்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் முன்னுப்பின் முரணான தகவல்களை தெரிவிக்கவே அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பதும், கஞ்சா வியாபாரம் செய்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் கஞ்சா எங்கிருந்து வாங்கி வந்தாய்? எத்தனை நாட்களாக இதுபோல் வியாபாரம் செய்கிறாய் என்று காவல் துறையினர் விசாரித்துள்ளனர்.
காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்து விஜய் தான் கையில் அணிந்திருந்த வெள்ளி மோதிரத்தை விழுங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விஜயை ஸ்கேன் செய்து மோதிரம் வயிற்றுக்குள் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் அவருக்கு இனிமா கொடுத்து மோதிரத்தை வெளியில் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து விஜய் மீண்டும் வடவெள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.