கோவை சுந்தராபுரம் பகுதியில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி விட்டு கல்லூரி மாணவர் தலைமுறைவானார். இரண்டு தனிப்படைகள் அமைத்து கல்லூரி மாணவரை போத்தனூர் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா. 19 வயதான ரேஷ்மா அப்பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு படிப்பை விட்டு விட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள கனி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ரேஷ்மாவுடன் கல்லூரியில் படித்து வந்த குடியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ ராம் ரேஷ்மாவை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ரேஷ்மா பணிபுரியும் கனி டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சென்ற ஸ்ரீராம் தன்னை காதலிக்கும்படி ரேஷ்மாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
கணவரை கொலை செய்ய நண்பர் மூலம் முயற்சி செய்த சுந்தரி சீரியலின் துணை நடிகை கைது!
ஆனால் அவர் காதலிக்க மறுக்கவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேஷ்மா மீது தாக்குதல் நடத்தினார். இதில் கழுத்து, முகம் உட்பட நான்கு இடங்களில் ரேஷ்மாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீராம் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் ரேஷ்மாவை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரித்து, தலைமறைவான ஸ்ரீராமை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், காதலிக்க மறுத்த பெண்ணின் மீது கத்தியால் தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.