உதயநிதி ஸ்டாலின் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்ட சபரீசன்!

By Manikanda Prabu  |  First Published Jun 3, 2023, 6:08 PM IST

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், உதயநிதி ஸ்டாலின் பற்றி கூறிய தகவலால் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுப்புகள் எழுந்துள்ளன.
 


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய  விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாமன்னன் படம்தான் தன்னுடைய கடைசிப் படம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சராக இருக்கும் அடுத்த முன்று ஆண்டுகளுக்கு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அதற்கு பின்னர் தாம் நடிப்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக இயங்கி வருகிறார். அப்போது முதலே அவர் திரைப்படங்களில் நடிப்பது சரியாக இருக்காது எனவும், திரைப்படங்களை கைவிட்டு அரசியலில் முழுக்கவனம் செலுத்துமாறு அவரது தந்தையும், முதல்வருமான ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக, அமைச்சராக பொறுப்பேற்ற  முதல் நாளே இனி எந்தப் புதிய படங்களில் நடிக்கப்போவதில்லை என உதயநிதி ஸ்டாலின் உறுதிபட தெரிவித்து விட்டார். மாமன்னன் திரைப்படம் கூட ஏற்கனவே கையெழுத்தான படம் என்பதால், அதனை உதயநிதி ஸ்டாலின் முடித்துக் கொடுத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இந்த பின்னணியில், மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பலரும், உதயநிதி மீண்டும் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்த நிலையில், அமைச்சராக இருக்கும் அடுத்த முன்று ஆண்டுகளுக்கு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அதற்கு பின்னர் தாம் நடிப்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்
 

ஆனால், உதயநிதியின் ஆசைக்கு அந்த நிகழ்ச்சியிலேயே அவரது மைத்துனர் சபரீசன் முட்டுக்கட்டை போட்டுள்ளார். பொதுவாக, செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்க்கும் சபரீசன், மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார்; நடிக்க வேண்டாம் என அழுத்தமாக கூறினார்.

நடிப்பதை கைவிட முடிவெடுத்த போது உதயநிதி ஸ்டாலின் வருத்தப்பட்டதாக தகவல் தெரிவித்த சபரீசன், “தற்போது தன் முன்னிருக்கும் மக்கள் பணிகளால் அந்த வருத்தம் அவருக்கு இல்லை. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.  அரசியலில் அவர் இன்னும் உயரத்துக்கு வருவார். அவருக்கு முக்கியப் பொறுப்புகள் இருக்கின்றன.” என்றும் தெரிவித்தார்.

சபரீசன் பேட்டியில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. முதலில், திரைப்படங்களில் நடிப்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என மறைமுகமாக விருப்பம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலினின் ஆசைக்கு, அவர் திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என அழுத்தம் திருத்தமாக தெரிவித்து சபரீசன் முட்டுக்கட்டை போட்டுள்ளார். இரண்டாவதாக, அவருக்கு முக்கிய பொறுப்புகள் இருப்பதாகவும் சபரீசன் தெரிவித்துள்ளார்.

கலைஞரை தனது அண்ணனாக பாவித்து கருணாநிதிக்கு இசை அஞ்சலி செலுத்திய துப்பரவு தெழிலாளி
 

முதல்வர் ஸ்டாலின் தன் வசம் வைத்திருத்த திமுக இளைஞரணியை உதயநிதி வசம் கொடுத்து தமது அதிகாரத்தை அவருக்கு கைமாற்றியுள்ளார். முதல் முறை எம்.எல்.ஏ.வான உதயநிதி தற்போது அமைச்சரும் ஆகியுள்ளார். இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனது செயல்களால் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின் என்கிறார்கள் உடன்பிறப்புகள். அத்துடன், உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்ற பேச்சுகளும் கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளன. இந்த பின்னணியில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் இருப்பதாக சபரீசன் கூறியது, துணை முதல்வர் பதவியை வைத்துத்தான் என கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்து அறிவாலய வட்டாரங்கள் கூறுகையில், மக்களவை தேர்தல் எதிர்வரவுள்ளது. தேர்தல் வேலைகள் அதிகமாக உள்ளன. அத்துடன் அமைச்சராக உள்ள உதயநிதிக்கு, திமுக இளைஞரணி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் உள்ளன. அதைத்தான் சபரீசன் அவ்வாறு கூறியுள்ளார் என்கின்றனர்.

click me!