
மேற்குவங்க மாநிலம், ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலானது ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகில் செல்லும் மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதே வழித்தடங்களில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலும் வரவே அதன் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விடிய விடிய நடைபெற்ற மீட்பு பணியில் 280 சடலங்களை மீட்டுள்ளனர். கயமடைந்த 1000க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
இந்த விபத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகவும், இதில் 30 பேர் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் விபத்து ஏற்பட்டும் பாதிப்பு ஏற்படாத பெட்டிகளில் பயணம் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் தாங்களாகவே சென்னை திரும்பியுள்ளனர். சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த ராஜலஷ்மி, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த நாகேந்திரன், நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பல்லாவரம் பகுதியை சேர்ந்த ராஜலஷ்மி கூறுகையில், ரயிலில் பி8 பெட்டியில் பயணித்திருந்தோம், தனக்கு முன்னால் இருந்த பெட்டியில் தடம் புரண்டு பெரிய விபத்துக்கள் ஆனது, ஆனால் நான் இருந்த பெட்டியில், பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்வண்டி குலுங்கச் மட்டுமே செய்துள்ளது. விபத்து நடைபெற்ற பகுதியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை இருந்ததால் அங்கிருந்து நடந்து வந்து பேருந்து மூலம் புவனேஸ்வர் அடைந்தோம். தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பிலும் ரயில்வே நிர்வாகம் சார்பிலும் தொலைபேசி மூலமாக தங்களை குறித்து விசாரித்துக் கொண்டே இருந்ததாக தெரிவித்தனர் . அரசு உதவி இல்லாமல் தாங்களாகவே வந்ததாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடவுள் கொடுத்த மறு வாய்ப்பாக இதை பார்க்கிறேன் என்றார். உள்ளூர் மக்கள் நிறைய உதவியாக இருந்தார்கள் மீட்பு குழுவினர் வருவதற்கு முன்பாகவே உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்தார்