"நட்டுவின் கனவு !!" சின்னப்பம்பட்டியில் என்ன செய்கிறார் ‘யார்க்கர்’ நடராஜன்..? நெகிழ வைக்கும் அறிவிப்பு..

By Ganesh RamachandranFirst Published Dec 17, 2021, 4:34 PM IST
Highlights

காயங்களும், கொரோனாவும் நடராஜனை முடக்கப் பார்த்தாலும், மாஸாக ரீ-எண்ட்ரி கொடுக்க கிராமத்திலிந்தே தயாராகி வருகிறார் அவர்

சவால்களை எதிர்கொண்டு சாதிக்கும் மனிதர்களின் முன்னேற்றக் கதைகள் எப்போதுமே நமக்கு உத்வேகம் தருபவை. அதிலும் சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தில் ஏழ்மை குடும்பத்தில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடும் ஹீரோவாக உயர்ந்த கிரிக்கெட் நட்சத்திரம் நடராஜனின் வாழ்கை தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ளக்கூடியது. 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஐ.பி.எல்லில் விளையாடுவதற்காக சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்திலிருந்து துபாய் புரப்பட்டார் நடராஜன். துபாயில் தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து, பின்னர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் காயம்பட்ட வருண் சக்கரவர்த்திக்கு மாற்று வீரராக களமிறங்கினார். ஒரே சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகை போட்டிகளிலும் அறிமுகமான வீரர் என்ற புகழை பெற்றார். அதோடு பெருமை கொள்ளத்தக்க காபா டெஸ்ட் வெற்றியில் முக்கியப் பங்குவகித்து கபில் தேவ் போன்ற ஜாம்பவான்களின் பாராட்டை பெற்றார். இப்படி தான் சின்னப்பம்பட்டியிலிருந்து 2020 டிசம்பரில் கிளம்பி, 3 மாதங்களில் மீண்டும் ஊர் திரும்பிய போது அவர் தேசிய ஹீரோவாகியிருந்தார்.

ஆனால் அதன் பிறகு இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடிக்கும் அவரது கனவுகள் பலிக்கவில்லை. கடுமையாக உழைத்து சாதித்தும், சோதனைகள் அவரை துரத்தின. கால் முக்கியில் ஏற்பட்ட காயம் அவரை கட்டிப்போட்டது. உலகக் கோப்பை அணியில் அதனால் வாய்ப்பு கிடைக்காமல் போனது. அருவை சிகிச்சை மேற்கொண்டு, தேசிய கிரிக்கெட் அகாடமி பயிற்சிக்கு திரும்பிய போதும் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் காயத்துக்குப் பிறகு பழைய துல்லியத்தை மீண்டும் பிடிக்க அவர் சிரமப்பட்டார். அதோடு அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவே நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரிலும் பங்கேற்க முடியாமல் போனது. இப்படி அடுத்தடுத்த சோதனைகள் ஏற்பட்டாலும், மீண்டு வந்து சாதிக்கும் துடிப்புடன் தொடர்ந்து உடல் தகுதி பெற நடராஜன் முயன்று வருகிறார்.

தற்போது தனது சொந்த கிராமத்தில் உள்ள நடராஜன், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு நல்ல விவசாயி, நிலத்திலிருந்து பெற்ற செல்வத்தை மீண்டும் நிலத்திலேயே போடுவான் என்று சொல்வதைப் போல, கிரிக்கெட்டிலிருந்து சம்பாதித்த பொருளைக் கொண்டு நல்ல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கவும், வசதியில்லாமல் கனவுகளை சுமக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டவும் திட்டமிட்டுள்ளார் நடராஜன். தனது சொந்த கிராமத்தில் சர்வதேச போட்டிகள் நடத்து அளவிற்கு தரத்துடன் கிரிக்கெட் மைதானம் ஒன்றை கட்டத்தொடங்கியுள்ளதாக ட்விட்டர் வாயிலாக அறிவித்துள்ளார். இதன் மூலம், தமிழக இளைஞர்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சிக் களம் கிடைக்கும்.

 

Happy to Announce that am setting up a new cricket ground with all the facilities in my village, Will be named as *NATARAJAN CRICKET GROUND(NCG)❤️
* 🎈Last year December I Made my debut for India, This year (December) am setting up a cricket ground💥❤️ pic.twitter.com/OdCO7AeEsZ

— Natarajan (@Natarajan_91)

அந்த மைதானத்துக்கு ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற எஸ்.சி.ஜி மைதானத்தைப் போல “என்.சி.ஜி” என்று பெயர் வைக்கப்போவதாகவும் கூறியுள்ளார். NATARAJAN CRICKET GROUND என்பதன் சுருக்கமே NCG. சாதனைப் பயணத்தை தக்கவைத்துக் கொள்ளும் போராட்டத்தின் நடுவே, தன்னைப் போன்ற மற்ற இளைஞர்கள் சாதிக்கவும் உதவ அவர் நேரத்தையும், சம்பாதித்த பணத்தையும் செலவிடுவது போற்றத்தக்கது. நடராஜனுக்கு ஏஷியாநெட் தமிழின் வாழ்த்துக்கள்...

click me!