பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் வரும் 26 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் நீராஜ் சோப்ரா முதல் அமன் செராவத் வரையில் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் கொண்ட விளையாட்டு வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 2024 ஒலிம்பிக் தொடரானது வரும் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தமாக 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து 10,714 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடுகின்றனர். ஆனால், இந்தியா சார்பில் வெறும் 16 போட்டிகளில் மட்டுமே 70 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களில் சந்தோஷ் தமிழரசன், சுபா வெங்கடேசன் (திருச்சி), வித்யா ராமராஜ் (கோயம்புத்தூர்), பிரவீன் சித்திரவேல், ராஜேஷ் ரமேஷ் ஆகிய தமிழக வீரர், வீராங்கனைகள் உள்பட 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவை செய்ன் நதிக்கரையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெறாமல் செய்ன் ஆற்றில் நடைபெறுகிறது.
ஏன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்? விளக்கம் கொடுத்த அஜித் அகர்கர்!
செய்ன் நதிக்கரையில் 4 மைல் தூரம் வரையில் 160 படகுகள் மூலமாக 10,714 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஊர்வலமாக அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்வலமானது பாரிஸ் முழுவதும் சென்று இறுதியாக டிரோகாடெரோவில் முடிவடைகிறது. இந்த நிலையில் தான், பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் பதக்கங்களை வெல்லக் கூடிய சிறந்த 10 இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க. பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் அனைவரது எதிர்பார்ப்பும் இந்தியா எத்தனை பதக்கங்கள் வெல்லும் என்பது தான்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு 8.5 கோடி நிதி உதவி - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு!
இதில் அனைவரது பார்வையும் நீரஜ் சோப்ரா, பிவி சிந்து, மீராபாய் சானு, அனுஷ் அகர்வாலா, ரிதம் சங்வான், மனு பாகர், ரமீதா ஜிண்டால், இளவேனில் வளரிவன், அங்கிதா பகத், சூரஜ் பன்வர், பிரியங்கா கோஸ்வாமி ஆகியோர் உள்பட பலர் மீது விழுகிறது. இவர்கள் இந்திய நாட்டிற்காக பதக்கம் வென்று கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீரஜ் சோப்ரா: (ஈட்டி எறிதல்)
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் உலக சாம்பியன் மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா. கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார். ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும், டயமண்ட் லீக் கோப்பையிலும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி (பேட்மிண்டன்)
சமீபத்தில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 ஜோடியாக இருந்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மலேசிய ஓபன் போட்டிகளில் தோல்வி அடைந்த சாத்விக் – சிராக் ஜோடி பிரெஞ்சு ஓபன் மற்றும் தாய்லாந்து ஓபனை வென்றனர். இதன் காரணமாக பாரீஸில் 2024 தங்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்டிம் பங்கல் (மல்யுத்தம்)
முன்னாள் உலக ஜூனியர் சாம்பியன் மற்றும் 2023 உலக சாம்பியன்ஷிப் 53 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர் அண்டிம் பங்கல். ஹரியானா மல்யுத்த வீராங்கனையான அண்டிம் பங்கல் தனது முதல் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கிறார்.
லோவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை)
கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் 69 கிலோ எடைபிரிவு ரத்து செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து தற்போது 75 கிலோ எடை பிரிவுக்கு முன்னேறியுள்ளார். கிராண்ட் பிரிக்ஸ் உஸ்தி நாட் லேபெமில் 75 கிலோ எடைபிரிவில் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் மற்றும், வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
பிவி சிந்து (பேட்மிண்டன்)
2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் முறையாக வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் கைப்பற்றிய ஒரே இந்திய பெண் வீராங்கனை பிவி சிந்து ஆவார்.
மீராபாய் சானு (பளுதூக்குதல்):
2017 உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற மீராபாய் சானு, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மணிப்பூரைச் சேந்த மீராபாய் சானு பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஹாக்கி டீம்:
ஹாக்கி அணி 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுளது. அந்த ஒலிம்பிக் தொடரில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் தொடரிலும் இடம் பெற்றுள்ளனர்.
நிகத் ஜரீன்: (குத்துச்சண்டை):
2022 ஆண்டு முதல் 2 போட்டிகளை இழந்த நிகத் ஜரீன், சிறந்த வலுவான போட்டியாளராக திகழ்கிறார். ஆனால், 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார். தற்போது பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் பங்கேற்கிறார்.
மனு பாக்கர் (துப்பாக்கி சுடுதல்):
2023 ஆம் ஆண்டு உலக சாமியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் 3 சுற்றுகளில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
அமன் செஹ்ராவத் (மல்யுத்தம்):
2022 உலக U23 சாம்பியன், 2023 ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம், 2023 விளையாட்டு போட்டியில் 57 கிலோ வெண்கல பதக்கம் வென்றார். தற்போது பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரிலும் தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.