பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவானது ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெறாமல் வரலாற்றில் முதல் நிகழ்வாக செய்ன் நதிக்கரையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
உலக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த தருணம் இன்னும் 5 நாட்களில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 3ஆவது முறையாக 2024 கோடைகால ஒலிம்பிக் தொடர் தொடங்குகிறது. பாரீஸ் ஒலிம்பிக் 2024 விளையாட்டு போட்டி நடத்துவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரூ.61,500 கோடி வரையில் செலவிட்டுள்ளனர். இதில் ஒலிம்பிக் போட்டியில் முதல் பரிசு வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கத்தின் விலை ரூ.75 லட்சம் ஆகும். இதே போன்று வெள்ளிப் பதக்கத்தின் விலை ரூ.50 லட்சம, வெண்கலப் பதக்கத்தின் விலை ரூ.30 லட்சம் ஆகும்.
undefined
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் வரும் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தமாக 32 விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. இதில் 329 நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேலும், 10,714 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர். இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர். இதில் அனைவரது பார்வையும் நீரஜ் சோப்ரா, பிவி சிந்து, மீராபாய் சானு, அனுஷ் அகர்வாலா, ரிதம் சங்வான், மனு பாகர், ரமீதா ஜிண்டால், இளவேனில் வளரிவன், அங்கிதா பகத், சூரஜ் பன்வர், பிரியங்கா கோஸ்வாமி ஆகியோர் உள்பட பலர் மீது விழுகிறது. இவர்கள் இந்திய நாட்டிற்காக பதக்கம் வென்று கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவை செய்ன் நதிக்கரையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெறாமல் செய்ன் ஆற்றில் நடைபெறுகிறது. செய்ன் நதிக்கரையில் 4 மைல் தூரம் வரையில் 160 படகுகள் மூலமாக 10,714 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஊர்வலமாக அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்வலமானது அதிக பார்வையாளர்கள் பார்க்கும் தளமான டிரோகாடெரோவில் முடிவடைகிறது.