பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு மத்திய அரசு ரூ.470 வரையில் நிதியுதவி அளித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 3ஆவது முறையாக ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. 1900 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் ஒலிம்பிக் 2024 தொடர் நடைபெற இருக்கிறது. வரும் 26 ஆம் தேதி தொடங்கும் பாரீஸ் 2024 கோடைகால ஒலிம்பிக் தொடரானது ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் 2024 தொடரில் இந்தியா சார்பில் 66 வீரர்கள் மற்றும் 47 வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 113 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதன் தொடக்க விழாவில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து இந்திய மூவர்ண கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்த உள்ளார். இதே போன்று தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான அஜந்தா சரத் கமலும் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்த உள்ளார்.
TNPL 2024: முதல் முறையாக முடிவே இல்லாமல் முடிந்த போட்டி – இது என்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை!
ஒலிம்பிக் 2024 இடம் பெறும் விளையாட்டுகள்:
இந்த ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, பீச் வாலிபால், குத்துச்சண்டை, கேனோ, சைக்கிளிங் (ரோடு, டிராக், மவுண்டைன் பைக்), டைவிங், குதிரையேற்றம், ஃபென்சிங் (கத்தி சண்டை), கால்பந்து, கோல்ஃப், கைப்பந்து, ஹாக்கி, ஜூடோ, மராத்தான் நீச்சல், மாடர்ன் பெண்டாத்லான், ரிதம் ஜிம்னாஸ்டிக்ஸ், ரோயிங், ரக்பி செவன்ஸ், படகோட்ட போட்டி, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, டென்னிஸ், டிராம்போலின், டிரையத்லான், வாலிபால், தண்ணீர் பந்தாட்ட போட்டி, பளுதூக்குதல் மற்றும் மல்யுத்த ஆகிய விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
ஒலிம்பிக் 2024 போட்டிகள் நடைபெறும் இடங்கள்:
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் பாரீஸை சுற்றிலும் நடைபெற உள்ளது. இதற்காக ஸ்டேட் டி பிரான்ஸ், ரோலண்ட் கரோஸ் ஸ்டேடியம் மற்றும் சாம்ப்ஸ் எலிசீஸ் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும். ஒலிம்பிக் போட்டிக்கான முதல் சர்ஃபிங் போட்டி டஹிடியில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் இந்த தொடரில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிக்கு என்று அரசு ரூ.470 கோடி வரையில் செலவிட்டுள்ளது. இது குறித்து இந்திய விளையாட்டு ஆணையத்தின் மிஷன் ஒலிம்பிக் செல் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டில் 16 பிரிவுகளில் இடம் பெறும் இந்திய வீரர்களை தயார்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.470 கோடி வரையில் செலவிட்டுள்ளது.
அதன்படி அதிகபட்ச தொகையாக தடகளத்திற்கு ரூ.96.08 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. பேட்மிண்டனுக்கு ரூ.72.02 கோடி, குத்துச்சண்டை ரூ.60.93 கோடி, துப்பாக்கிச்சுடுதல் ரூ.60.42 கோடி, வில்வித்தைக்கு ரூ.39.18 கோடி, ஜூடோவிற்கு ரூ.6.3 கோடி, மல்யுத்தம் ரூ.37.80 கோடி மற்றும் பளுதூக்குதல் ரூ.26.98 கோடி என்று வீரர்களின் பயிற்சிக்கு நிதி வழங்கியுள்ளது.
இது தவிர, குதிரையேற்றம் ரூ.97 லட்சம், டென்னிஸ் ரூ.1.67 கோடி, கோல்ஃப் ரூ.1.74 கோடி, ரோயிங் ரூ.3.89 கோடி, நீச்சல் ரூ.3.9 கோடி, சைலிங் ரூ.3.78 கோடி, டேபிள் டென்னிஸ் ரூ.12.92 கோடி என்று அரசு நிதியுதவி அளித்திருக்கிறது. மத்திய அரசு வழங்கிய நிதியுதவி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களும், பயிற்சி முகாம்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.