மீண்டும் மீண்டும் சொதப்பும் ராகுல்.. ரஹானேவும் இனி வேலைக்கு ஆக மாட்டாரு போல!! இந்திய அணி மோசமான தொடக்கம்

By karthikeyan VFirst Published Dec 6, 2018, 9:15 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமாக தொடங்கியுள்ளது. முதல் 5 விக்கெட்டுகளை 100 ரன்களுக்கு உள்ளாகவே இழந்து திணறிவருகிறது. 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமாக தொடங்கியுள்ளது. முதல் 5 விக்கெட்டுகளை 100 ரன்களுக்கு உள்ளாகவே இழந்து திணறிவருகிறது. 

இந்தியா -  ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அடிலெய்டில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து முரளி விஜயும் ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். பயிற்சி போட்டியில் சிறப்பாக ஆடி நம்பிக்கையளித்த இருவருமே சொற்ப ரன்களில் வெளியேறினர். ராகுல் 2 ரன்களில் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து முரளி விஜய் 11 ரன்களிலும் கேப்டன் கோலி 3 ரன்களில் வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலியை வெறும் 3 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் வெளியேற்றினார். 

கோலியை தொடர்ந்து ரஹானேவும் வெறும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல், ரஹானே ஆகிய இருவரும் தொடர்ந்து சொதப்பிவருகின்றனர். ராகுலுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டும் அவற்றையெல்லாம் தொடர்ந்து வீணடித்து வருகிறார். ரஹானேவும் அண்மைக்காலமாகவே பெரியளவில் சோபிக்கவில்லை. சொல்லும்படியான பெரிய இன்னிங்ஸ் எதையும் ஆடவில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் முதல் 4 விக்கெட்டுகளை 41 ரன்களுக்கே இழந்துவிட்டது இந்திய அணி. ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிய புஜாராவுடன் ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார். புஜாரா நிதானமாக ஆட, மறுமுனையில் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினார். 

இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்துவந்த நிலையில், அவசரப்பட்டு ரோஹித் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். 61 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, நாதன் லயனின் ஸ்பின் பவுலிங்கை தூக்கி அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். நாதன் லயன் வீசிய 38வது ஓவரின் 2வது பந்தில் சிக்ஸர் அடித்த ரோஹித் சர்மா, அடுத்த பந்தையும் தூக்கி அடித்தார். ஆனால் இந்த முறை பந்து சிக்ஸருக்கு செல்லாமல் மார்கஸ் ஹாரிஸின் கைகளுக்கு சென்றது. ரோஹித்தும் விக்கெட்டை பறிகொடுக்க, புஜாராவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 

இந்திய அணி முதல் 5 விக்கெட்டுகளை 100 ரன்களுக்கு உள்ளாகவே இழந்து மோசமான நிலையில் உள்ளது. 
 

click me!