புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியானது விளையாடிய 6 போட்டிகளில் 4 தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 11 புள்ளிகள் பெற்று 11 ஆவது இடத்தில் உள்ளது.
புரோ கபடி லீக்கின் 10ஆவது சீசன் அகமதாபாத்தில் கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. இதில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு காளைகள், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என்று 12 அணிகள் இடம் பெற்றுள்ளன. அகமதாபாத்தில் நடந்த முதல் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 38-32 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் யு மும்பா மற்றும் யுபி யோதாஸ் அணிகள் மோதின. இதில், யு மும்பா 34 – 31 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. 2ஆம் நாளில் நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் மோதின. இதில், தமிழ் தலைவாஸ் அணியானது 42-31 என்ற கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தியது.
இதைத் தொடர்ந்து நடந்த தமிழ் தலைவாஸ் அணி தனது 2ஆவது போட்டியில் 38 – 48 என்ற கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. மூன்றாவது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 38 – 36 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
ஆனால், அதன் பிறகு நடந்த 3 போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணியானது தொடர்ந்து தோல்வியை தழுவியது. இதன் காரணமாக விளையாடிய 6 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று 4 தோல்வியுடன் 11 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணியானது 11ஆவது இடம் பிடித்துள்ளது. புனேரி பல்தான் அணி 6ல் 5 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னையில் நடக்கும் 2ஆவது போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இல்லாமல் தமிழ் தலைவாஸ் அணியானது இன்னும் 15 போட்டிகளில் விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.
தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள்:
அஜிங்க்யா பவார், சாகர், ஹிமான்ஷு, எம் அபிஷேக், சாஹில், மோஹித், ஆஷிஷ், நரேந்தர், ஹிமான்ஷு, ஜதின், ஹிமான்ஷு சிங், செல்வமணி கே, ரித்திக், மாசாணமுத்து லட்சுமணன், சதீஷ் கானன், அமீர் ஹூசைன் பஸ்தாமி, முகமதுரஜா கபௌத்ரஹங்கி.