ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை.. தமிழக முன்னாள் முதல்வர்களின் சாதனைகள்..! கமலின் குரலில் கம்பீரமாய் ஒலித்தது

By karthikeyan VFirst Published Aug 9, 2022, 9:28 PM IST
Highlights

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களின் சாதனைகள் கமல்ஹாசனின் குரலில், அவர்களின் புகைப்படங்கள் டிஜிட்டல் திரையில் திரையிட்டு பட்டியலிடப்பட்டன.
 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 29ம் தேதி முதல் நடந்துவந்த நிலையில், இன்றுடன் வெற்றிகரமாக முடிந்தது. மாலை 6 மணிக்கு தொடங்கி நிறைவு விழா நடந்தது.

நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்காடி துவார்கோவிச், துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு வரலாறு குறித்த கலைநிகழ்ச்சி, பதக்கம் வழங்கும் நிகழ்வு ஆகியவை நடந்தன. 

அதைத்தொடர்ந்து தமிழ் மண் நிகழ்த்துக்காலம் நிகழ்ச்சியின் 2ம் பாகம் காட்சிப்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழ் மண் நிகழ்த்துக்காலத்தின் முதல் பாகம் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், 2ம் பாகம் இன்று நிகழ்த்தப்பட்டது.

கமல்ஹாசனின் பின்னணி குரலில் தமிழ் மண் நிகழ்த்துக்காலம் காட்சிப்படுத்தப்பட்டது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்களிப்பு குறித்து விவரிக்கப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், வ.உ.சிதம்பரனார், பாளையக்காரர்கள், மருதநாயகம், வேலுநாச்சியார் உள்ளிட்ட தமிழக விடுதலை வீரர்களின் பங்களிப்பு குறித்து விவரிக்கப்பட்டது.

பாரதியார், தந்தை பெரியார் ஆகியோரின் பங்களிப்பு குறித்தும் விவரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகத்தை ஆண்ட முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை அவர்களது தனித்துவ அடையாளங்களுடன் நினைவுகூரப்பட்டனர்.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அண்ணா, சமூக நீதி காவலர் கலைஞர் கருணாநிதி, ஜீனியஸ் எம்ஜிஆர், பெண் அதிகாரத்தை உறுதி செய்த ஜெயலலிதா என அவரவர் அடையாளங்களுடன் முன்னாள் முதல்வர்கள் கமல்ஹாசனின் குரலில் நினைவுகூரப்பட்ட போது, டிஜிட்டல் திரையில் அவர்களது புகைப்படங்கள் திரையிடப்பட்டன.

கடைசியாக, தமிழக முன்னாள் முதல்வர்களின் மரபை பின்பற்றி தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்துவரும் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினும் நினைவுகூரப்பட்டார்.
 

click me!