நான்கே மாதத்தில் அதிசயத்தை நிகழ்த்திட்டீங்க..! சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்காடி துவார்கோவிச் பாராட்டு

By karthikeyan VFirst Published Aug 9, 2022, 8:11 PM IST
Highlights

மாமல்லபுரத்தில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் தான் இதுவரை நடந்ததிலேயே சிறந்த தொடர் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்காடி துவார்கோவிச் பாராட்டு தெரிவித்தார்.
 

44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் முதல் முறையாக இந்தியாவில் நடந்தது. அதுவும் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 

வெறும் நான்கே மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மிகச்சிறப்பாக செய்து அசத்தியது. 186 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகளை தங்கவைத்து, அந்தந்த நாட்டினருக்கு அவரவர் உணவுகள் கிடைக்க வழிசெய்து சிறப்பாக உபசரித்தது தமிழக அரசு.

கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கி 11 சுற்று போட்டிகள் முடிந்து இன்று நிறைவு விழா நடந்துவருகிறது. நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்காடி துவார்கோவிச், துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

டிரம்ஸ் சிவமணி, வீணை சக்கரவர்த்தி ராஜேஷ் வைத்யா ஆகியோரின் இசை கச்சேரியுடன் தொடங்கியது செஸ் ஒலிம்பியாட் நிறைவுவிழா. அதைத்தொடர்ந்து பறக்கும் பியானோவை பறந்துகொண்டே வாசித்து அசத்தினார் வெளிநாட்டு பெண் இசை கலைஞர். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு வரலாறை பறைசாற்றும் விதத்தில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. 

அதன்பின்னர் இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர், விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் உரையாற்றினர். அவர்களை தொடர்ந்து உரையாற்றிய சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்காடி துவார்கோவிச், செஸ் விளையாட்டின் தாயகமான சென்னையில் இருப்பது பெருமையாக இருக்கிறது. 4 மாதத்தில் செஸ் ஒலிம்பியாடிற்கான ஏற்பாடுகளை நடத்தி, 4 மாதத்தில் அதிசயத்தை நிகழ்த்தியதற்கு நன்றி. 

சென்னை மக்களின் மிகச்சிறந்த உபசரிப்பிற்கும், உணவிற்கும் நன்றி. வீரர், வீராங்கனைகளை பாதுகாப்பாக அழைத்துச்சென்ற பேருந்து, கார் ஓட்டுநர்களுக்கு நன்றி என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் அர்காடி.
 

click me!