ஒலிம்பிக் தங்க வேட்டை, ஜல்லிக்கட்டுக்கு பிரம்மாண்ட களம்!ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

By karthikeyan VFirst Published Aug 9, 2022, 9:54 PM IST
Highlights

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறையை மேம்படுத்த அசத்தலான திட்டங்களை அறிவித்தார்.
 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 29ம் தேதி முதல் நடந்துவந்த நிலையில், இன்றுடன் வெற்றிகரமாக முடிந்தது. மாலை 6 மணிக்கு தொடங்கி நிறைவு விழா நடந்தது. 

நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்காடி துவார்கோவிச், துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு வரலாறு குறித்த கலைநிகழ்ச்சி, பதக்கம் வழங்கும் நிகழ்வு ஆகியவை நடந்தன. 

அதைத்தொடர்ந்து தமிழ் மண் நிகழ்த்துக்காலம் நிகழ்ச்சியின் 2ம் பாகம் காட்சிப்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழ் மண் நிகழ்த்துக்காலத்தின் முதல் பாகம் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், 2ம் பாகம் இன்று நிகழ்த்தப்பட்டது.

அதன்பின்னர் நிறைவு உரை ஆற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாடில் கலந்துகொண்ட சர்வதேச வீரர், வீராங்கனைகள் தமிழக அரசு செய்த ஏற்பாடுகளை பாராட்டியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடப்பது உறுதியானதுமே, ரூ.102 கோடியை அதற்காக ஒதுக்கி, 18 துணைக்குழுக்களை உருவாக்கி, நான்கே மாதங்களில் உலகமே வியக்குமளவிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்தது தமிழக அரசு. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மேலும் தமிழகத்தை சர்வதேச அளவிலான விளையாட்டு மையமாக மாற்ற  முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின்,  ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் அதிகளவில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல தயார்படுத்தும் விதமாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கி ஒலிம்பிக் தங்கவேட்டை என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 1073 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.26 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் பன்னாட்டு பயிற்சியாளர்களை கொண்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. வடசென்னை மற்றும் கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் குத்துச்சண்டை அகாடமி ஆரம்பிக்கப்படவுள்ளது. தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுவிற்கு பிரம்மாண்டமான விளையாட்டுக்களம் அமைக்கப்படவுள்ளது என்றார் மு.க.ஸ்டாலின்.
 

click me!