சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக சாய்னா நேவால்... தந்தை மகிழ்ச்சி

First Published Oct 19, 2016, 5:56 AM IST
Highlights


சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள ஆணைக்குழு உறுப்பினராக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பேட்மிண்டன் போட்டிகளில் பல்வேறு வெற்றிகளைக் குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் சாய்னா நேவால். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அவர், முழங்கால் காயம் காரணமாக முதல் சுற்று போட்டிகளிலேயே வெளியேறினார்.

தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு காயம் குணமடைந்து விரைவில் பயிற்சிக்கு திரும்ப உள்ளார் சாய்னா. இந்த நிலையில் சாய்னா நேவாலை கவுரவிக்கும் வகையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள ஆணைக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவருக்கு, சர்வதேச ஒலிம்பிக் போட்டியின் தலைவர் தாமஸ் பாச்சிடம் இருந்து அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது நடைபெற்ற ஐ.ஓ.சி. தடகள ஆணைக்குழு தேர்தலில் தங்களது வேட்புமனுவை பரிசீலித்து தங்களை உறுப்பினராக நியமித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள ஆணைக்குழுவில் உறுப்பினராக சாய்னா நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவரது தந்தை ஹர்வீர் சிங் தெரிவித்தார்.

click me!