விளையாட்டு வீரர்களுக்கு வயது வெறும் எண்களாகிவிட்டது..! முன்மாதிரி ரொனால்டோ.. எப்படி சாத்தியமானது..?

By karthikeyan VFirst Published Nov 28, 2022, 9:39 PM IST
Highlights

கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ 37 வயதிலும், டீன் வயதினரை போல சிறந்த ஃபிட்னெஸுடன் அபாரமாக விளையாடிவருகிறார். இந்த தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு வயது வெறும் எண்களாகிவிட்டது எப்படி என்று பார்ப்போம்.
 

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் ஆடிவரும் சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானா ரொனால்டோ (37), லியோனல் மெஸ்ஸி(35) ஆகியோருக்கு 35 வயதுக்கு மேல். ஆனாலும் இளம் வயதினரை போல முழு ஃபிட்னெஸுடன் ஆடிவருகின்றனர்.

குறிப்பாக கிறிஸ்டியானா ரொனால்டோ 37 வயதிலும், அவரது வயதில் பாதி வயதினரை போன்ற ஃபிட்னெஸுடன் இருக்கிறார். ரொனால்டோவின் டயட், உடற்பயிற்சி ஆகியவற்றுடன் நவீனகால வசதிகளும் தான் அவரது ஃபிட்னெஸுக்கு காரணங்கள். அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மற்ற கால்பந்து வீரர்கள் மட்டுமல்லாது, மற்ற விளையாட்டு வீரர்களும் பின்பற்றுகின்றனர்.

FIFA World Cup 2022: 5 கால்பந்து உலக கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர்! கிறிஸ்டியானா ரொனால்டோ வரலாற்று சாதனை

முன்பெல்லாம் 30-35 வயது விளையாட்டு வீரர்கள், அதற்கு மேல் விளையாடுவதற்கு கஷ்டப்படுவார்கள். ஆனால் இப்போது ரொனால்டோ, ரோஜர் ஃபெடரர், மெஸ்ஸி, விராட் கோலி, டிவில்லியர்ஸ் என பலவிதமான விளையாட்டு வீரர்களும் அல்டிமேட் ஃபிட்னெஸுடன் 35-40 வயதிலும் சிறப்பான ஃபிட்னெஸுடன் திகழ்கின்றனர்.

35-40 வயதில் விளையாடுவது மட்டுமல்லாது, சாதனைகளையும் புரிகின்றனர். இந்த ஆண்டுக்கான கால்பந்து விளையாட்டின் உயரிய விருதான Ballon d'Or விருதை 34 வயது ஃபிரான்ஸ் வீரரான கரிம் பென்ஸிமா  வென்றார். ஃபெர்னாண்டினோ (37), ஜேம்ஸ் மில்னர்(36) ஆகிய வீரர்கள் 40 வயதை நெருங்கிய போதிலும் சிறப்பாக ஆடிவருகின்றனர்.

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு அவர் முதலில் ஆட தொடங்கியபோது அவருக்கு வயது 19. 18 ஆண்டுகள் கழித்து இப்போது 37 வயதிலும் அதே ஃபிட்னெஸுடன் மிரளவைக்கிறார் ரொனால்டோ. அதற்கு முக்கிய காரணம், அவர் போட்டியின்போது 13-14 கிமீ எல்லாம் ஓடுவதில்லை. 10 முதல் பத்தரை கிமீ மட்டுமே ஓடுகிறார். அது அடுத்த போட்டிக்கு அவர் தயாராவதற்கும், காயமடையாமல் ஃபிட்னெஸுடன் இருக்கவும் உதவுகிறது.

மேலும் அவர் டயட்டில் சமரசமே செய்வதில்லை. 3 வேளை உணவு எடுக்காமல், 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுக்கிறார். அதுவும் ஆரோக்கியமான, ஆர்கானிக் உணவுகளை மட்டுமே எடுக்கிறார். தேவையில்லாததை உட்கொள்வதேயில்லை. அதிகமான முட்டை, ஸ்வீட் உருளைக்கிழங்கு, ப்ரொகோலி ஆகியவற்றை அதிகமாக டயட்டில் சேர்த்துக்கொள்கிறார்.

மேலும் போதுமான அளவிற்கு நீர் அருந்துகிறார். நாகரீகம் என்ற பெயரில் திணிக்கப்பட்ட கூல்ட்ரிங்ஸ்களை அருந்துவதில்லை. ஒரு நேர்காணலின்போது கூட, அந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டிலை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, தண்ணீர் அருந்துமாறு வலியுறுத்தினார். அது பெரும் பரபரப்பையும் சலசலப்பையும், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

முறையான வாம்-அப், கார்டியோ ஒர்க் அவுட், வெயிட் லிஃப்டிங், கால்பந்து பயிற்சி ஆகியவற்றை சுழற்சிமுறையில் முறையாக பின்பற்றக்கூடியவர். வாரத்தில் 5 நாட்கள், தினமும் 4 மணி நேரம் முறையான உடற்பயிற்சி செய்கிறார். கால் மற்றும் வயிற்றுப்பகுதிகளுக்கான உடற்பயிற்சிகளை தீவிரமாக மேற்கொள்கிறார்.

FIFA World Cup 2022: உலக கோப்பையில் மாரடோனாவின் சாதனையை சமன் செய்த லியோனல் மெஸ்ஸி

அவரது டயட் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றுடன், நவீன கால மேம்பட்ட தொழில்நுட்பங்களும், ஃபிசியோதெரபிஸ்ட், மனநிலையை மேம்படுத்த மனநல மருத்துவர்கள், ஸ்ட்ரெந்த் & கண்டிஷனிங் பயிற்சியாளர்கள் என விளையாட்டு வீரர்களின் உடல் மற்றும் மன வலிமைகளை மேம்படுத்த நிறைய வசதிகள் உள்ளன. அதனால் சரியான வழிகாட்டுதலின் மூலம், சிறப்பான  மற்றும் முறையான பயிற்சிகளை எடுத்து, பணிச்சுமை பராமரிக்கப்பட்டு, வீரர்கள் நல்ல ஃபிட்னெஸுடன் 40 வயதை நெருங்கியபோதிலும் டீன் வயதினரை போல திகழ்கின்றனர்.
 

click me!