2வது டி20-க்கு பிறகு ரோஹித் படைத்த அபார சாதனைகள்

By karthikeyan VFirst Published Feb 8, 2019, 4:25 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு பிறகு ரோஹித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனைகளை படைத்துள்ளார். 
 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு பிறகு ரோஹித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனைகளை படைத்துள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 158 ரன்களை எடுத்தது. 159 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிஷப் பண்ட் - தோனி ஜோடி பொறுப்பாக ஆடி இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தது. 19வது ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

டி20 பேட்ஸ்மேனாக ரோஹித் எட்டிய மைல்கல்:

இந்த போட்டியில் 50 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மைல்கல்லை ரோஹித் சர்மா எட்டியுள்ளார். 2288 ரன்களுடன் ரோஹித் சர்மா முதலிடத்திலும் 2272 ரன்களுடன் நியூசிலாந்து தொடக்க வீரர் மார்டின் கப்டில் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மார்டின் கப்டில் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடவில்லை.

டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவின் சாதனை:

டி20 போட்டிகளில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ் இந்திய அணி பெறும் 12வது வெற்றி இது. இந்திய அணிக்கு 14 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ள ரோஹித் சர்மா, 12 போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றி பெற்று கொடுத்துள்ளார். முதல் 14 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட பிறகு, அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் பட்டியலில் 12 வெற்றிகளுடன் மைக்கேல் கிளார்க், சர்ஃப்ராஸ் அகமது ஆகியோருடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார் ரோஹித் சர்மா. 
 

click me!