ரோஹித் அதிரடி அரைசதம்.. ரிஷப் பண்ட் பொறுப்பான பேட்டிங்!! நியூசிலாந்தை வீழ்த்தி ஈசியா வென்ற இந்திய அணி

By karthikeyan VFirst Published Feb 8, 2019, 3:01 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, டி20 தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரண்டாவது போட்டியில் ஆடியது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது. முதல் போட்டியை போல அல்லாமல், இந்த போட்டியில் தொடக்கம் முதலே நியூசிலாந்து அணியின் ரன்ரேட்டை இந்திய பவுலர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். கோலின் டி கிராண்ட்ஹோம் மட்டும் இடையில் அதிரடியாக ஆடி ரன்ரேட்டை உயர்த்தினார். அவரும் அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே ஆட்டமிழக்க, அதன்பிறகு டெத் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தினர் இந்திய பவுலர்கள். இதையடுத்து 20 ஓவர் முடிவில் அந்த அணி 158 ரன்களை எடுத்தது. 

159 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, தொடக்கம் முதலே அடித்து ஆடினார். அதிரடியாக ஆடிய அவர், 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 29 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், பொறுப்புடன் ஆடினார். 

பொறுமையாக ஆடிவந்த தவான், 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரிஷப்புடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்த விஜய் சங்கர், 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இதையடுத்து ரிஷப்புடன் தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டதோடு, இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தது. 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய குருணல் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!