அவரால்தான் நாங்க தோற்றோம்!! ஒரே ஒரு வீரரை காரணம் காட்டும் சாஸ்திரி

By karthikeyan VFirst Published Sep 15, 2018, 9:55 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு ஒரு வீரரை காரணம் காட்டியுள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 
 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு ஒரு வீரரை காரணம் காட்டியுள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-4 என இழந்தது. இந்த தொடரில் இந்திய அணியில் விராட் கோலியை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் அனைத்து போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், ராகுல் ஆகியோர் ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் ஆடினரே தவிர பெரும்பாலான இன்னிங்ஸ்களில் கைகொடுக்க தவறிவிட்டனர். 

அதனால்தான் முதல் மற்றும் நான்காவது போட்டியில் வெற்றியின் விளிம்பில் தோல்வியை தழுவினோம். இரண்டாவது போட்டியில் படுதோல்வி, மூன்றாவது போட்டியில் வெற்றி, கடைசி போட்டியில் போராடி தோல்வி என அதிகமான போட்டிகளில் தோற்று தொடரை இழந்தோம். 

இந்திய அணி போராடி தோல்வியடைந்த போட்டிகளில் எல்லாம், நாம் தோற்பதற்கு இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரனே காரணமாக அமைந்தார். அந்த அணி இக்கட்டான சூழலில் இருந்தபோதெல்லாம் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்த பங்களிப்பை அளித்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். இந்த தொடரில் 4 போட்டிகளில் ஆடி 272 ரன்களை குவித்த சாம் கரன், 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அவர் அணியில் இருந்து நீக்கப்பட்ட டிரண்ட்பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில்(மூன்றாவது போட்டி) அந்த அணி தோல்வியடைந்தது. 

அதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இரு அணிகளின் ஆட்டத்திற்கு இடையே பெரிய வித்தியாசமாக இருந்த சாம் கரன் தான் இந்திய அணி தொடரை இழக்க காரணம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

20 வயதான சாம் கரன், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான கெவின் கரனின் மகன். இந்தியாவுக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி அசத்தினார். விராட் கோலியுடன் சேர்த்து அவருக்கும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. 

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் குறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, நாங்கள் படுமோசமாக தோற்கவில்லை. இந்த தொடரை இங்கிலாந்து வென்றதற்கான கிரெடிட் சாம் கரனையே சாரும். அதனால்தான் நானும் கோலியும் பேசி முடிவெடுத்து, இங்கிலாந்து அணி சார்பில் தொடர் நாயகன் விருதை சாம் கரனுக்கு கொடுக்க பரிந்துரைத்தோம். சாம் கரன் எப்போதெல்லாம் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தாரோ, அப்போதெல்லாம் நாங்கள் பாதிக்கப்பட்டோம். 

எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அப்போது சாம் கரன் ரன்களை குவித்தார். மேலும் இந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்களுக்கு விக்கெட்டே இல்லாமல் இருந்தது. அந்த சூழலில் இந்திய அணியின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதேபோல சவுத்தாம்ப்டனில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் அந்த அணி 86 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அப்போதும் சாம் கரன் ரன்களை குவித்தார். இப்படி, முக்கியமான தருணங்களில் எல்லாம் அவர் அந்த அணியை மீட்டெடுத்தார். அதனால் சாம் கரன் தான் இந்திய அணி தோல்விக்கு காரணம் என ரவி சாஸ்திரி தெரிவித்தார். 

click me!