சச்சினுக்கே கிடைக்காத கௌரவத்தை பெற்ற ராகுல் டிராவிட்!!

First Published Jul 2, 2018, 12:53 PM IST
Highlights
rahul dravid inducted into icc hall of fame


2018ம் ஆண்டுக்கான ஐசிசி “ஹால் ஆஃப் ஃபேம்” பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் சேர்க்கப்பட்டுள்ளார். இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். 

கிரிக்கெட்டில் சிறந்த வீரர்கள் ஐசிசி “ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் சேர்த்து கவுரவிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் சில வீரர்களை அந்த பட்டியலில் இணைத்து ஐசிசி கவுரப்படுத்துகிறது. 

அந்த வகையில், 2018ம் ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று இன்றளவும் அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிளெர் டெய்லர் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். 

ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணையும் 5வது இந்திய வீரர் ராகுல் டிராவிட் ஆவார். டிராவிட்டுக்கு முன்னதாக பிஷன் பேடி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அனில் கும்ப்ளே ஆகிய நான்கு இந்திய வீரர்கள் இந்த கவுரவத்தை பெற்றுள்ளனர். 

1996ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகி 2012ம் ஆண்டு வரை சுமார் 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடியவர் ராகுல் டிராவிட். எவ்வளவு இக்கட்டான சூழலிலும் அணியின் வெற்றியில் மட்டுமே குறியாக இருக்கும் டிராவிட், இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்தவர். மிகச்சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் வீரர். இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் இந்திய அணிக்காகவே உழைத்து வருகிறார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு, பல இளம் திறமைகளை உருவாக்கி வருகிறார் டிராவிட். 

இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் டிராவிட்டுடன் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு வீரரான ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலிய அணிக்காக அளப்பரிய பங்காற்றியவர். அந்த அணிக்கு தொடர்ச்சியாக இரண்டு ஒருநாள் உலக கோப்பைகளை வென்று கொடுத்தவர். தனது கேப்டன்சியின் கீழ் அசைக்க முடியாத சக்தியாக ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி சென்றவர். 

கிரிக்கெட் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என்றெல்லாம் அழைக்கப்படும் மற்றும் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கரே இதுவரை இந்த பட்டியலில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் அவரது பெயர் இணைக்கப்பட்டாலும் கூட, அவருக்கு முன்னதாக அந்த பட்டியலில் இணைந்த பெருமை டிராவிட்டுக்கு சொந்தமாகியுள்ளது. 
 

click me!