#TokyoOlympics வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு ஃபோன் போட்டு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!

By karthikeyan VFirst Published Jul 24, 2021, 4:15 PM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
 

இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் இதைவிட நல்ல தொடக்கம் இருக்கவே முடியாது என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் நாளே பதக்கம் வென்று இந்தியாவிற்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளார் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன்மூலம் பதக்க பட்டியலில் இந்தியா கணக்கை தொடங்கியது.

மகளிருக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் “ஸ்னாட்ச்” பிரிவில் 87 கிலோ, ”கிளீன் அன்ட் ஜெர்க்” பிரிவில் 115 கிலோ என, மொத்தம் 202 கிலோ பளுதுாக்கிய இந்தியாவின் மீராபாய் சானு, 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதே எடைப் பிரிவில் சீன வீராங்கனை ஹூ ஜிஹி தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேஷிய வீராங்கனை கேண்டிக் விண்டிங் வெண்கல பதக்கம் வென்றார்.

இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் இதைவிட நல்ல தொடக்கம் இருக்க முடியாது என்று மீராபாய் சானுவிற்கு டுவிட்டரில் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அத்துடன் நில்லாமல், மீராபாயை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். வருங்காலத்திலும் இதுபோல நிறைய பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.

மீராபாய் சானுவிற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.
 

click me!