சிறந்த ஒருநாள் வீரர் டெண்டுல்கரா கோலியா..? உலக கோப்பை வின்னிங் கேப்டன் அதிரடி

By karthikeyan VFirst Published Jan 20, 2019, 3:25 PM IST
Highlights

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் விராட் கோலி. வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிடமுடியாது எனினும் சச்சின் டெண்டுல்கருடன் கோலி ஒப்பிடப்படுகிறார். ஒப்பீட்டை கடந்து இருவரில் சிறந்தவர் யார் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. 
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, போட்டிக்கு போட்டி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்கிறார் கோலி. சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் கோலி, அவரை போலவே ரன்களை குவித்துவருகிறார். 

39 ஒருநாள் சதங்களுடன் 10000 ரன்களை கடந்துவிட்ட கோலி, ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் இலக்கை விரட்டுவதாகட்டும், முதல் பேட்டிங் ஆடினால், அந்த ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப முடிந்தவரை அதிகபட்ச ஸ்கோரை அணிக்காக குவிப்பதாகட்டும், அதில் கோலியின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கோலியின் வேட்கை அபாரமானது.

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் விராட் கோலி. வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிடமுடியாது எனினும் சச்சின் டெண்டுல்கருடன் கோலி ஒப்பிடப்படுகிறார். ஒப்பீட்டை கடந்து இருவரில் சிறந்தவர் யார் என்ற கேள்வியே முன்வைக்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியாவில் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று அசத்தியது. இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிளார்க் அளித்த பேட்டியில், விராட் கோலி தான் எல்லா காலக்கட்டத்திலும் உலகின் தலைசிறந்த ஒருநாள் வீரர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். விராட் கோலி இந்திய அணிக்காக செய்திருக்கும் பங்களிப்பையும் அவரது சாதனையையும் பார்த்தால், அவர் தான் தலைசிறந்த ஒருநாள் வீரர் என்பதில் சந்தேகமே இல்லை என்று கிளார்க் தெரிவித்தார்.

2015ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!