
இஷான் கிஷனின் காட்டடி ஆட்டம், ரோஹித் சர்மாவின் அருமையான தொடக்கம் ஆகியவற்றால் மும்பையில் இன்று நடந்து வரும் ஐபிஎல் டி20 போட்டியின் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் பீல்டிங் செய்ய முடிவு செய்தார். முதலி்ல பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது.
டெல்லி அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணம் இஷான் கிஷன்(81), ரோஹித் சர்மா(41) ஆகியோர்தான். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொலார்ட் சொதப்பினார். மற்ற வகையில் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.
இந்தப் போட்டியில் டெல்லி அணியின் பந்துவீச்சு சொத்தையாக இருந்தது. ஏலத்தில் எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்த குல்தீப் யாதவை டெல்லி அணி எடுத்தது சரியான தேர்வு என்பதை நிரூபித்துவிட்டார். 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் வீழ்த்தினார். அதிலும் ரோஹித்சர்மா, பொலார்ட், அன்மோல்ப்ரீத் சிங் ஆகிய 3 விக்கெட்டுகளை குல்தீப் வீழ்த்தி தனது தேர்வை சரியென நிருபித்து ஃபார்முக்குத்திரும்பியுள்ளார்.
அடுத்ததாக, இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருவர் மட்டுமே டெல்லி அணியில் ஓரளவுக்கு உருப்படியாகப் பந்துவீசினர். கலீல் அகமது 13 டாட் பந்துகளையும், குல்தீப் 8 டாட் பந்துகளையும் வீசினர்.
நாகர்கோட்டி,அக்ஸர் படேல், தாக்கூர் ஓவரை இஷான் கிஷனும்,ரோஹித் சர்மாவும் வெளுத்து வாங்கிவிட்டனர். மொத்தத்தில் டெல்லி அணியின் பந்துவீச்சு பல்இல்லாத பாட்டிபோன்று அமைந்திருந்தது.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் ருத்தரதாண்டவம் ஆடிவிட்டார். ரோஹித் சர்மா அதிரடி வேடிக்கை முடிந்தபின், இஷான் கிஷன் தனதுவேட்டையைத் தொடங்கினார். 34 பந்துகளில் அரைசதம் அடித்த இஷான் கிஷன், அடுத்த 14 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார்.
15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தி்ருந்தது. இஷன் கிஷன் அதிரடியால் கடைசி 5 ஓவர்களில் 59 ரன்கள் குவித்தது.
இஷான் கிஷன்48 பந்துகளில் 81 ரன்கள்(2சிக்ஸர்,11பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோஹித் சர்மா 32 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா, கிஷன் இருவரும் 67 ரன்கள்சேர்த்துப் பிரிந்தனர். பவர்ப்ளேயில் மும்பைஅணி, விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது.
மும்பை அணியில் மற்ற வகையில் பெரிதாக யாரும் ஸ்கோர் செய்யவில்லை. கெய்ரன் பொலார்ட் 3 ரன்னில் ஏமாற்றினார். டிம் டேவிட் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 22 ரன்கள் சேர்த்துபெவிலியன் திரும்பினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.