
கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடந்த ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரி்க்காவிடம் தோல்வி அடைந்ததையடுத்து தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியது.
தெ.ஆப்பிரிக்கா வெற்றி
கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க மகளிர் அணி.
முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் சேர்த்தது. 275 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஆட்டநாயகி
தென் ஆப்பிரிக்க அணித் தரப்பில் 52 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு நகர்த்திய விக்கெட் கீப்பர் மிகான் டூ பிரீஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.இந்தத் தோல்வியின் மூலம் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியது. உலகக்கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சேஸிங் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
அரையிறுதி ஆட்டம்
இதன் மூலம் வரும் 30ம் தேதி வெலிங்டனில் நடக்கும் முதல்அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து 4-வது இடத்தில் இருக்கும் மே.இ.தீவுகள் அணி மோதுகிறது.
தொடர் சேஸிங் வெற்றி
31-ம் தேதி நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி மோதுகிறது.
தென் ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் தொடர்ந்து 16 ஆட்டங்களாக சேஸிங் செய்து வென்று வருகிறது. இதில் 4 போட்டிகள் நடப்பு உலகக் கோப்பைப்போட்டியில் சேஸிங்கில் நெருக்கடியான நேரத்தில் வென்றவையாகும்.
தோல்விக்கு காரணம்
இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் ஆட்டம் இந்திய அணியின் பக்கம்தான் இருந்தது. கடைசி 3 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி 2 ஓவர்களில் 14 ரன்களும், கடைசி ஓவரில் 7 ரன்களும் தென் ஆப்பிரிக்க அணிக்குத் தேவைப்பட்டது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடியளித்து எளிதாக வென்றிருக்கலாம் ஆனால், இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சு கடைசிநேரத்தில் நெருக்கடியளி்க்கும் விதத்தில் அமையவில்லை.
இந்திய வீராங்கனை சர்மா கடைசி 3 ஓவர்களில் 2 ஓவர்களையும், கெய்க்வாட் ஒருஓவரையும் வீசி பவுண்டரி ஏதும் அடிக்கவிடவில்லை என்றபோதிலும் சிங்கில் ரன்னை எடுக்க அனுமதித்தது தோல்விக்கு காரணமாகும். லைன்லென்த்தில் பந்துவீசி ரன் ஓடவிடாமல் தென் ஆப்பிரிக்க அணியினருக்கு நெருக்கடி அளித்திருந்தால், கடைசி ஓவர் இன்னும் த்ரில்லாக அமைந்திருக்கும்.
சதம் கண்ட பார்ட்னர்ஷிப்
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் 2-வது விக்கெட்டுக்கு லாரா குடால்(49ரன்கள்), லாரா வோல்வார்ட்(80) இருவரும் சேர்ந்து 120 ரன்கள் சேர்த்தது ஆட்டத்தின் திருப்புமுனையாகும். இது தவிர விக்கெட் கீப்பர் மிகான் டூபிரீஸ் நடுவரிசையில் தூணாக நின்று அரைசதம்(52) அடித்து ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்தியத் தரப்பில் கெய்க்வாட், ஹர்மன்ப்ரீத் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நல்ல அடித்தளம்
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலிவர்மா நல்லஅடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். முதல்விக்கெட்டுக்கு இருவரும் 91 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஷபாலி வர்மா 53 ரன்னில் ரன் அவுட்ஆகினார்.மந்தனா 71 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
நடுவரிசையில் கேப்டன் மிதாலி ராஜ்(68), ஹர்மன்ப்ரீத் கவுர்(48) இருவரும் சேர்ந்து அணியை பெரிய ஸ்கோருக்கு நகர்த்தினர். மற்றவகையில் கடைசி வரிசை வீராங்கனைகள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ஷபிம் இஸ்மாயில், கிளாஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.