நான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை..! சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்

By karthikeyan VFirst Published Jul 29, 2021, 9:59 PM IST
Highlights

மேரி கோம் தனது சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து ஏசியாநெட் நியூஸிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.
 

பாக்ஸிங்கில் 6 முறை உலக சாம்பியனான இந்தியாவின் நட்சத்திர பாக்ஸர் மேரி கோம், 38 வயதிலும் தனது கடின உழைப்பினாலும் முயற்சியாலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்டார். முதல் போட்டியில் தன்னை விட 15 வயது இளமையான டோமினிகா குடியரசை சேர்ந்த மிகுவெலினா ஹெர்னாண்டெஸை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் கொலம்பியா வீராங்கனை இங்க்ரிட் வாலன்ஸியாவை எதிர்கொண்ட மேரி கோம், முதல் சுற்றை 1-4 என புள்ளிக்கணக்கில் இழந்தார். ஆனால் 2 மற்றும் 3வது சுற்றுகளை 3-2 என வென்றார். 2 சுற்றுகளையுமே 3-2 என வென்றார் மேரி கோம். 2 சுற்றுகளை வென்றதால் மேரி கோம் தான் வெற்றியாளர் என கருதப்பட்ட நிலையில், புள்ளி வித்தியாச அளவை வைத்து கணக்கிடும்போது, இந்த போட்டியில் மேரி கோம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

அதன்விளைவாக, காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார் மேரி கோம். மேரி கோமின் தோல்வி அதிர்ச்சியளித்தது. இந்த புள்ளி கணக்கீடு முறை மேரி கோமுக்கு மட்டுமல்லாது, அவரது பயிற்சியாளருக்கும் குழப்பமாக இருந்ததுடன், அவர்களால் அதை புரிந்துகொள்ளவும் முடியவில்லை.

இந்த போட்டி முடிவு குறித்து டுவீட் செய்த மத்திய அமைச்சர் கிரன் ரிஜீஜூ, மேரி கோம் நீங்கள் ஒலிம்பிக்கில் ஒரேயொரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கலாம். ஆனால் நீங்கள் எனக்கு எப்போதுமே ஒரு சாம்பியன் பாக்ஸர் தான். உலகில் எந்தவொரு பாக்ஸிங் வீராங்கனையும் நெருங்கக்கூட முடியாத சாதனைகளை நீங்கள் படைத்துள்ளீர்கள். நீங்கள் ஒரு ஜாம்பவான். புள்ளிகளின் அடிப்படையில் நீங்கள் தோற்றதாக அறிவிக்கப்பட்டாலும், எங்களை பொறுத்தமட்டில் நீங்கள் தான் வெற்றியாளர் என்று கிரன் ரிஜீஜூ டுவீட் செய்திருந்தார்.

For all of us was the clear winner but Judges have their own calculations😥 https://t.co/bDxjHFK9MZ pic.twitter.com/gVgSEugq4Q

— Kiren Rijiju (@KirenRijiju)

அந்த டுவீட்டை தனது பயிற்சியாளர் தன்னிடம் காட்டிய பிறகுதான், தான் தோற்றதை உறுதிசெய்ததாக தெரிவித்துள்ளார் மேரி கோம்.

இதுகுறித்து ஏசியாநெட் நியூஸிடம் பிரத்யேகமாக பேசிய மேரி கோம்,  நான் போட்டி முடிந்ததும் இரத்த மாதிரி கொடுக்க சென்றுவிட்டேன். அப்போது நான் தோற்றுவிட்டதாக எனது பயிற்சியாளர் சொல்லும்போது கூட நான் அதை நம்பவில்லை. பின்னர் அவர் அமைச்சர் கிரன் ரிஜீஜூவின் டுவீட்டை என்னிடம் காட்டினார். அதன்பின்னர் தான் நான் தோற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டதை உணர்ந்தேன். நான் இந்த ஒலிம்பிக்கிற்காக மிகக்கடுமையாக போராடியிருக்கிறேன்; கடுமையாக உழைத்திருக்கிறேன். எனது முழு பங்களிப்பையும் செய்தேன். நான் எப்படி ஆடினேன் என்பது எனக்கு தெரியும். கிட்டத்தட்ட நாம் கொள்ளையடிக்கப்படும்போது, அந்த உணர்வு மிக மோசமானது என்று தனது அதிருப்தியை மேரி கோம் வெளிப்படுத்தியுள்ளார்.
 

click me!