பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் மற்றும் நீரஜ் சோப்ரா ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வதந்திகள் பரவின. இது குறித்து மனு பாக்கரின் தந்தை ராம் கிஷன் விளக்கம் அளித்துள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்காக துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் மனு பாக்கர். 3ஆவது இடம் பிடித்த மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போன்று கலப்பு இரட்டையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார்.
ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா 89.45மீ தூரம் எறிந்து இந்தியாவிற்கு முதல் வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்தார். இறுதியாக இந்திய ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 6 பதக்கங்களுடன் பாரிஸ் ஒலிம்பிக் 2024 விழாவை நிறைவு செய்தது. பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் மனு பாக்கர் மற்றும் பிஆர் ஸ்ரீதேஷ் இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி அணி வகுப்பு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து நீரஜ் சோப்ரா மற்றும் மனு பாக்கர் இருவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் மட்டுமே அவர்கள் இருவரும் பேசிய நிலையில் சமூக வலைதளங்களில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பது தொடர்பாக செய்தி வெளியானது. அதோடு, மனு பாக்கரின் தாய் சுமேதா, நீரஜ் சோப்ராவுடன் பேசிய வீடியோவும் வெளியானது. அந்த வீடியோவில் தனது தலையில் நீரஜ் சோப்ராவின் கைகளை வைத்து ஆசிர்வாதம் வாங்குவது போன்று செய்தார்.
இது போன்ற வீடியோக்களை வைத்து நீரஜ் சோப்ரா மற்றும் மனு பாக்கர் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் தான் மனு பாக்கரின் தந்தை ராம் கிஷன் மனு பாக்கரின் திருமண செய்தி குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மனு பாக்கர் சின்ன வயசு தான். இன்னும், திருமண வயசு கூட ஆகவில்லை. ஆதலால், திருமணம் பற்றி இப்போதைக்கு யோசிக்கவே இல்லை என்றார்.
மேலும், மனு பாக்கரின் தாய் சுமேதா பாக்கர், நீரஜ் சோப்ராவை தனது மகனாக கருதுகிறார் என்றார். இதே போன்று நீரஜ் சோப்ராவின் தரப்பிலிருந்தும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அவரது மாமா கூறியிருப்பதாவது: நீரஜ் சோப்ராவின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் மட்டும் நடக்காது. உலகம் அறியும் வகையில் தான் நீரஜ் சோப்ராவின் திருமணம் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.