பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் நாடு திரும்பிய நிலையில் அவருக்கு விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து, 50மீ ஏர் ரைபிள் 3 பி பிரிவில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். இதே போன்று மகளிருக்கான 25மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் 4ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றும் வாய்ப்பை இழந்தார். இதில் அவர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தால் ஒரே ஒலிம்பிக் தொடரில் 3 பதக்கங்களை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனனையை மனு பாக்கர் படைத்திருப்பார். ஆனால், அது மட்டும் நடக்கவில்லை.
இதுவரையில் இந்தியா தங்கம், வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றவில்லை. இந்த தொடரில் இந்தியா பங்கேற்ற 16 விளையாட்டு போட்டிகளில் டென்னிஸ், டேபிள் டென்னிஸ், நீச்சல், படகு போட்டி, ரோவிங், ஜூடோ, குதிரையேற்றம், பேட்மிண்டன் என்று அனைத்திலும் தோல்வி அடைந்து வெளியேறியது. தற்போது ஈட்டி எறிதல், பளுதூக்குதல் ஆகிய பிரிவுகளில் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதே போன்று ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த நிலையில் தான் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் தற்போது நாடு திரும்பியுள்ளார். ஏர் இந்தியா விமானம் மூலமாக டெல்லி வந்த மனு பாக்கருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மனு பாக்கரின் பெற்றோர் ராம் கிஷன் மற்றும் தாயார் சுமேதா ஆகியோரும் விமான நிலையம் வந்திருந்தனர். மனு பாக்கருக்கு மாலை அணிவித்தும், அவரை தோள் மீது சுமந்து கொண்டு ஊர்வலமாகவும் சென்றனர்.
டெல்லி வந்தடைந்த மனு பாக்கர் முதலில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து வாழ்த்து பெற உள்ளார். இதையடுத்து வரும் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் ஒலிம்பிக் 2024 நிறைவு விழா நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்க மீண்டும் பாரிஸ் செல்கிறார். நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திக் கொண்டு வலம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற பிவி சிந்து பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்திச் சென்று அணி வகுப்பு நடத்தினார். நிறைவு விழாவில் 2 பதக்கம் வென்ற மனு பாக்கர் தேசிய கொடியை ஏந்திக் கொண்டு அணிவகுப்பு நடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் எடையை குறைக்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல: முடி வெட்டுவது, ரத்தத்தையும் வெளியேற்றியும் பலனில்லை!