அப்படிலாம் பார்த்தா கங்குலி, கவாஸ்கர் மாதிரி வீரர்கள் கிடைத்திருப்பார்களா..? கபில் தேவ் கடுப்பு.. காரணம் என்ன..?

First Published Jun 26, 2018, 1:58 PM IST
Highlights
kapil dev opinion about yo yo test


யோ யோ டெஸ்ட் தொடர்பான அதிருப்தியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும் வெளிப்படுத்தியுள்ளார். பல எடுத்துக்காட்டுகளை முன்வைத்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் கபில் தேவ்.

இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் உடற்தகுதிக்கு அண்மைக்காலமாக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிப்பதற்காக யோ யோ டெஸ்ட் நடத்தப்படுகிறது. அனுபவ வீரர்கள், சீனியர் வீரர்கள், கேப்டன் என எந்த பாரபட்சமும் இல்லாமல் இந்த டெஸ்ட் அனைத்து வீரர்களுக்கும் மேற்கொள்ளப்படுகிறது. 

யோ யோ டெஸ்டில் தேர்வாகாத வீரர்கள், அணியில் இடம்பிடிக்க முடியாது. யோ யோ டெஸ்டில் தேர்வாகததால் இங்கிலாந்தில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் ஆடும் வாய்ப்பை சஞ்சு சாம்சனும், ஆஃப்கானிஸ்தானுடனான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை முகமது ஷமியும் தவறவிட்டனர். 

ஐபிஎல்லிலும் உள்நாட்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடி, 2 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பிடித்த ராயுடு, யோ யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்நிலையில், யோ யோ டெஸ்ட் தொடர்பான சர்ச்சை வலுத்துள்ளது. உடற்தகுதி முக்கியம்தான். ஆனால் இந்த ஒரே ஒரு டெஸ்டின் மூலம் உடற்தகுதி இல்லை என்று வீரர்களை ஒதுக்குவது சரியல்ல என்ற குரல் வலுத்துள்ளது. 

யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாத வீரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், யோ யோ டெஸ்டின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும், அதையும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் போன்ற ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

யோ யோ டெஸ்ட் தொடர்பான விவாதங்கள் வலுத்துள்ள நிலையில், அதுதொடர்பாக பேசிய ரவி சாஸ்திரி, இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் யோ யோ டெஸ்டை அனைத்து வீரர்களும் எதிர்கொள்ள வேண்டும். இதில் தேர்ச்சி அடைந்தால் அணியில் ஆடலாம். இல்லையென்றால் நடையை கட்டலாம் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், யோ யோ டெஸ்ட் தொடர்பாக பேசியுள்ள கபில் தேவ், போட்டியில் ஆடுவதற்கு தேவையான உடற்தகுதி இருந்தால் போதும். அதைத்தவிர வேறு தகுதி தேவையில்லை. ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட பயிற்சிகளுடன் அவரவருக்கு தேவையான உடற்தகுதியுடன் இருப்பர். ஓடுவது மட்டுமே உடற்தகுதியாக கருத முடியாது. 

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் மாரடோனா வேகமாக ஓடமாட்டார். ஆனால் பந்து அவரிடம் கிடைத்துவிட்டால், அதிவேகமாக ஓடுவார். அதேபோலத்தான் ஒவ்வொரு வீரரும் உடற்தகுதி பயிற்சிகளை வெவ்வேறு விதமாக எதிர்கொள்வார்கள். ஓடும் பயிற்சி அதிகமாக எடுப்பதால் பேட்ஸ்மேன்களை காட்டிலும் பவுலர்கள் எளிதாக யோ யோ டெஸ்ட்டில் தேறிவிடுவர்.  யோ யோ டெஸ்ட்டை வைத்து வீரர்களை மதிப்பிட முடியாது. 

கிரிக்கெட்டை பொறுத்தவரை களத்தில் ஒரு வீரர் ஆடுவதை வைத்தே மதிப்பிட வேண்டும். பயிற்சியின் போது கூட 15 நிமிடங்களுக்கு மேல் ஓடுவதற்கு கவாஸ்கருக்கு பிடிக்காது. ஆனால் களத்தில் மூன்று நாட்கள் நின்று கூட பேட்டிங் ஆடுவார். அதேபோல், கங்குலி, லக்‌ஷ்மண், கும்ப்ளே ஆகியோர் கூட இதுபோன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறலாம் அல்லது தேர்ச்சி பெறாமல் போகலாம். அதற்காக அவர்கள் சிறந்த வீரர்கள் இல்லை ஆகிவிடுவார்களா? என கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!