உலக கோப்பையை அந்த அணிதான் வெல்லும்.. முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Feb 19, 2019, 11:01 AM IST
Highlights

உலக கோப்பை வரும் மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. கிரிக்கெட்டின் மெகா தொடரில் 10 அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடரை எந்த அணி வெல்லும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

உலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. தற்போதைய சூழலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. இரு அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளன. எனவே இரு அணிகளில் ஒரு அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்று பிரயன் லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். 

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கான கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. முதல் 3 வீரர்களான ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி என வேகப்பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. குல்தீப் யாதவ் சுழலில் மிரட்டுகிறார். இவ்வாறு நல்ல கலவையிலான வலுவான அணியாக இந்திய அணி திகழ்கிறது. இங்கிலாந்து அணியும் வலுவாக உள்ளது. 

இந்தியாவும் இங்கிலாந்தும் வலுவாக உள்ள அதேநிலையில், 5 முறை உலக கோப்பையை வென்ற சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவி துவண்டு போயுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், இரண்டு முறை உலக கோப்பையை வென்ற கேப்டனும் மூன்றுமுறை உலக கோப்பையை வென்ற அணியில் ஆடியவருமான ரிக்கி பாண்டிங், உலக கோப்பைக்கு ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரிக்கி பாண்டிங் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதே அந்த அணிக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி தொடர் தோல்விகளை தழுவிவருவதால் அந்த அணியை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஸ்மித்தும் வார்னரும் திரும்பிவிட்டால், ஆஸ்திரேலிய அணியும் வலுவான அணியாகவே திகழும். அந்த அணியும் உலக கோப்பையில் எதிரணிகளை தெறிக்கவிடும். எனவே ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்புவதை எதிர்நோக்கி காத்திருக்கிறது ஆஸ்திரேலியா. 

அதுமட்டுமல்லாமல் கேன் வில்லியம்சனின் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சிறப்பாகவே ஆடிவருகிறது. இந்நிலையில், முன்னாள் வீரர்கள் பலர் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகள் குறித்து கருத்து தெரிவித்துவருகின்றனர். 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும் மிகச்சிறந்த ஃபீல்டருமான முகமது கைஃபும் பெரும்பாலானோரை போலவே, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளில் ஒன்றுதான் வெல்லும் என்று கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!