ஐபிஎல் திருவிழா.. மும்பையில் இன்று கோலாகல தொடக்க விழா!!

First Published Apr 7, 2018, 11:22 AM IST
Highlights
ipl inaugural function in mumbai


ஐபிஎல் 11வது சீசன் இன்று தொடங்குகிறது. 10 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 11வது சீசன் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. 

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் களம் காண்கின்றன.

இந்த முறை புதிய கேப்டன்களின் தலைமையின் கீழ் சில அணிகள் களமிறங்குகின்றன. சென்னை அணிக்காக ஆடிவந்த அஸ்வினை இந்த முறை பஞ்சாப் அணி எடுத்ததோடு, அவரையே கேப்டனாகவும் நியமித்துள்ளது. அதேபோல, கொல்கத்தாவிற்கு இரண்டு முறை கோப்பையை வென்றுகொடுத்த கேப்டன் கம்பீரை இந்த முறை டெல்லி அணி எடுத்ததால், தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் அணிக்கு ரஹானேவும் ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சனும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐபிஎல் தொடர் கோலாகலமாக இன்று தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் முதல் போட்டி சென்னைக்கும் மும்பைக்கும் இடையே நடைபெறுகிறது. 

போட்டிக்கு முன்னதாக ஐபிஎல் தொடக்க விழா கோலாகலமாக தொடங்க உள்ளது. மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது. தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர்களான ஹிருத்திக் ரோசன், வருண் தவண் ஆகியோரது நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

மாலை 5 மணி அளவில் தொடங்கும் கலை நிகழ்ச்சிகள் சுமார் 90 நிமிடங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு போட்டி தொடங்கும்.
 

click me!