பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இன்று தொடங்கிய 8ஆவது நாளில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 25மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் போட்டியிட்ட மனு பாக்கர் 4ஆவது இடம் பிடித்து வெண்கலப பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 47ஆவது இடத்தில் உள்ளது. மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி இந்தியாவிற்கு 2ஆவது பதக்கத்தை வென்று கொடுத்தது. மேலும், ஆண்களுக்கான 50மீ ஏர் ரைபிள் 3பி பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே இந்தியாவிற்கு 3ஆவது வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார்.
இந்த நிலையில் தான் 8ஆவது நாளான இன்று தொடங்கிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 25மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் மனு பாக்கர் போட்டியிட்டார். இதில், முதல் எலிமினேஷனில் 6ஆவது இடம் பிடித்த மனு பாக்கர், 2ஆவது எலிமினேஷனில் 3ஆவது இடம் பிடித்தார்.
இதையடுத்து 3ஆவது எலிமினேஷனில் 2ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு முன்னேறினார். 4ஆவது எலிமினேஷனில் 2ஆவது இடத்தில் இருந்தார். கடைசியாக 28 புள்ளிகள் பெற 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதன் மூலமாக 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை இழந்து தொடரிலிருந்து வெளியேறினார். மேலும், ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பையும் இழந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் 2 விளையாட்டுகளில் போட்டியிட்ட மனு பாக்கர் ஒரு பதக்கம் கூட கைப்பற்றவில்லை. ஆனால், பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 3 விளையாட்டுகளில் இறுதிப் போட்டிக்கு சென்று 2 பதக்கம் வென்று சாதனை படைத்தார். 3 புள்ளிகள் வித்தியாசத்தில் 3ஆவது பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.